
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் இருமுனை போட்டி தான் நிலவும் என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகளை சமூக விடுதிகள் என அறிவித்தமைக்காக சென்னை, திமுக தலைமையகத்தில் முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: பெரியார் வழியில் படிப்படியாக சாதிமத அடையாளங்களை துடைத்தெறியும் வகையில் செயல்படும் முதல்வருக்கு பாராட்டை தெரிவித்தோம். மேலும், தேர்ச்சி பெற்ற 5,493 பேருக்கு கேங்மேன் பணி வழங்க வேண்டும். அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கணினி பயிற்றுநர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினோம்.