
கடலூர்: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார், காவல் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கடலூர் – செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை (கேட் எண் 170) இன்று காலை மாணவர்களுடன் பள்ளி வாகனம் கடக்க முயன்ற போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி பயணித்த பயணிகள் ரயில் (வண்டி எண் 56813) மோதியது. இந்த விபத்தில் ரயில் மோதியதில் பள்ளி வாகனம் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. விபத்தில் சிக்கிய பள்ளி வாகனத்தில் 4 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் பயணித்துள்ளனர்.