
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகள், ரூ.54.80 கோடியில் கட்டப்பட்ட வருவாய் துறை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான, கவுரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை உறுதி செய்யப்படும். இலங்கை அகதிகள் முகாம் என்பது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.