
ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள போஜ்குதா கிராமத்தைச் சேர்ந்த சுனாய் போஜ் என்ற பெண் கர்ப்பமாக இருந்த நிலையில், நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள சுகாதார மையத்தில் சுனாய் பெற்றோர் உதவி கேட்டனர்.
ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்தவர்கள் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போன் செய்து, ஆம்புலன்ஸை வரவழைத்தனர். ஆனால், மோசமான சாலை காரணமாக ஆம்புலன்ஸ் போஜ்குதா கிராமத்திற்கு10 கி.மீ -க்கு முன் நின்றுவிட்டது.
இதனால் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கம்புகளை ஒன்று சேர்த்து ஸ்டெச்சர் போன்ற ஒரு தொட்டிலை செய்தனர்.
அதில் கர்ப்பிணி பெண்ணை அமர வைத்து 10 கிலோமீட்டர் தூரத்திற்கு தோளில் சுமந்து சென்றனர். துஷாய்பாடா என்ற இடத்திற்கு சென்றனர். அங்கு ஆம்புலன்ஸ் நின்றது. கர்ப்பிணி பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் கைராபுட் என்ற இடத்தில் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு மாலை 6 மணிக்கு அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மோசமான சாலை காரணமாக கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மோசமான சாலையை உடனே சரி செய்யவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிரசவ காலத்தில் 25 ஆயிரம் பெண்கள் உயிரிழந்து வருகின்றனர் என்பது கவலைக்குரியது.