
சென்னை, கொளத்தூர் பகுதியில் 33 வயதாகும் இளம்பெண் ஒருவர் கணவரைப் பிரிந்து தன்னுடைய அம்மா, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரின் எதிர் வீட்டில் வசிப்பவர் ராஜேஷ். இவரும் மனைவியைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜேஷ், மது அருந்திவிட்டு அடிக்கடி எதிர்வீட்டில் குடியிருக்கும் இளம்பெண்ணை அவதூறாகப் பேசி வந்திருக்கிறார்.
அதனால் ராஜேஷுக்கும் எதிர்வீட்டில் குடியிருக்கும் பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த 6.7.2025-ம் தேதி மாலை அப்பெண், தன்னுடைய வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது, ராஜேஷ் அப்பெண்ணை அவதூறான வார்த்தைகளால் பேசியும், பாலியல் சைகை காட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் தொந்தரவு செய்திருக்கிறார்.
அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், சம்பவம் குறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளின் கீழ் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பிறகு ராஜேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.