
சென்னை: ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 15 பேர் மத்திய வெளியுறவுத் துறையின் முயற்சியால் மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அனைத்து செலவுகளையும் தமிழக பாஜக ஏற்றுள்ளதாக தெரிவித்தார். ஈரானில் சிக்கித் தவித்த தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் உவரியை சேர்ந்த 15 மீனவர்கள், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம் மீட்கப்பட்டனர்.
ஈரானிலிருந்து கப்பலில் துபாய் வந்த அவர்கள், அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கும் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று முன்தினம்சென்னைக்கும் வந்தனர். சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீனவர்களை வரவேற்றார். பின்னர் பாஜக ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம், திருநெல்வேலிமாவட்டம் உவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.