• July 7, 2025
  • NewsEditor
  • 0

மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் நவீன வசதியுடன் கழிப்பிடம், டிஜிட்டல் வகுப்பறைகள், வளர் இளம்பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி என ரூ.20 கோடி மதிப்பீட்டில் திட்டங்களை செயல்படுத்தப்பட உள்ளதாக ரோட்டரி ஆளுநர் தெரிவித்துள்ளனர்.

ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் கார்த்திக்

மதுரை வந்திருந்த ‘ரோட்டரி மாவட்டம் 3000’- இன் ஆளுநர் ஜே.கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரை, திருச்சி, பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய எட்டு மாவட்டங்கள் சேர்ந்து ‘ரோட்டரி மாவட்டம் 3000’ என அழைக்கப்படுகிறது.

150 கிளப்களோடு, 7,000 உறுப்பினர்கள் உள்ளனர். 2025 ஜூலை 1 முதல், அடுத்த ஆண்டு ஜூன் 30 வரையிலான காலத்தை ‘ரோட்டரி ட்ரீம் ஆண்டு’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘சமூக வளர்ச்சிக்கான எதிர்கால கனவுகளை முன்னோக்கி எடுத்துச் சென்று, செயல்படுத்த வேண்டும்’ என்பது இந்த ஆண்டின் நோக்கம்.

இந்தாண்டில், மேற்கண்ட 8 மாவட்டங்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சமூக நலப்பணிகள் செய்யப்பட உள்ளன. சமீபகாலமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதன் அங்கமாக, 15 ஆயிரம் வளரிளம் பெண்களுக்கு, ‘கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி’ செலுத்தப்பட உள்ளது. இந்த ஊசி ஒவ்வொன்றும் ரூபாய் 4,000 மதிப்புடையது. 15,000 வளரிளம் பெண்களுக்கு 3 கோடி ரூபாய் செலவில், பள்ளி கல்லூரிகளில் முகாம்கள் நடத்தி இந்த ஊசி செலுத்தப்பட உள்ளது.

மேலும், அரசுப்பள்ளி மாணவர்களின் ஆரோக்கியம், சுகாதாரத்தை மேம்படுத்த, 50 பள்ளிகளில் அதிநவீன வசதிகளோடு கழிப்பறைகள் கட்டித் தரப்பட உள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.7.50 லட்சம் வீதமாக 3.75 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் நடக்க உள்ளன.

அதேபோல, பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் வீதம் 50 பள்ளிகளில், ரூ1.25 கோடி செலவில் அதி நவீன டிஜிட்டல் தொடுதுறை பலகைகள் அமைத்து தரப்பட உள்ளன. தனியார் பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு இணையாக இந்த வசதிகள் மேம்படுத்தி தரப்பட உள்ளன.

பொறுப்பேற்ற புதிய ரோட்டரி நிர்வாகிகள்

மேலும் 10 கோடி ரூபாய் மதிப்பில் நவீன தகன எரிவாயு மையம், பல்வேறு விளையாட்டுகளையும் ஒருங்கிணைத்த உள் விளையாட்டு அரங்கம், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மலிவு வாடகையில் சமுதாயக்கூடம் மற்றும் மாணவர்கள் தங்கள் அறிவை மேம்படுத்த கலந்தாய்வு, கருத்தரங்குகள் நடத்த ஆடிட்டோரியமும் கட்டித் தரப்பட உள்ளது. இதற்கான இடங்கள் விரைவாக தேர்வு செய்யப்பட முன்னேற்பாடுகள் தொடங்கி விட்டன.

இது தவிரவும் மாணவர் நலம், பெண்கள் நலம், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு 7 மாதங்களில், 7 சமூக நல திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு இந்த ஓராண்டில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சமூக நலத்திட்ட பணிகளை ரோட்டரி சங்கம் மூலமாக செய்ய இருக்கிறோம். ரோட்டரி உறுப்பினர்களின் நிதி பங்களிப்போடு இப்பணிகள் செய்யப்பட உள்ளன. உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தி, இந்த ஆண்டில் மட்டும் 1,500 -க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களோடு பல்வேறு கிளப்புகளும் உருவாக்கப்பட உள்ளது” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *