
பாஜக தேசியத் தலைவருக்கான தேர்வு விரைவில் நடக்க உள்ளது.
2020-ம் ஆண்டு பாஜக-வின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெ.பி.நட்டா. இவரின் பதவிக்காலம் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதமே முடிந்துவிட்டது. ஆனால், 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காகப் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
அதன் பின், பல்வேறு காரணங்களால், தேசியத் தலைவர் தேர்வு தாமதமாகி, இப்போது வரை, ஜெ.பி.நட்டா அந்தப் பதவியில் நீடித்து வருகிறார்.
பாஜக கட்சியின் விதிமுறைகளின் படி,
கட்சிக்குள் தேசியத் தலைவர் தேர்வு நடப்பதற்கு முன்பு, கட்சியின் மொத்த மாநிலத் தலைமை பதவிகளில், குறைந்தது 50 சதவிகிதமாவது நிரப்பப்பட்டிருக்க வேண்டும். அதாவது, 19 மாநிலங்களில் தலைமை பதவி நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.
அதற்கான வேலை வேக வேகமாக பாஜகவிற்குள் நடந்து வருகிறது. இப்போது 37 மாநிலத் தலைமை பதவிகளில், 14 மாநிலத் தலைமை பதவிகளை நிரப்பிவிட்டது பாஜக.
இன்னும் இருக்கும் மாநிலங்களிலும், அந்தப் பதவியை நிரப்புவதற்கான வேலை தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.
இந்த மாநிலங்களின் பட்டியலில், முக்கிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
எப்போது அறிவிப்பு வரும்?
ஆக, இந்தப் பதவிகள் விரைவில் நிரப்பப்பட்டு, தேசியத் தலைவர் அறிவிப்பு வரும் ஜூலை 10-ம் தேதி அல்லது 18-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயண முடிவிற்குப் பிறகு, அறிவிப்பு வெளியாகும்.
தேசியத் தலைவர் பதவியைப் பொறுத்தவரை, பொதுவாக, பாஜகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் இணைந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கும். அவர் ஒருவரே தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வார். பின்னர், அவரே ஒருமனதோடு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

தேசியத் தலைவர் தேர்வு தொடர்ந்து தாமதமாகி வந்ததற்கு முக்கிய காரணம், பாஜகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு இடையே ஒருமித்த கருத்து உண்டாகாமலிருந்ததே.
ஆனால், இப்போது பேச்சுவார்த்தை இறுதியை நோக்கி நகர்ந்துள்ளதாம். அதனால்தான், விரைவில், தேசியத் தலைவர் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ரேஸில் இருப்பவர்கள்…
தேசியத் தலைவர் தேர்வு பெயர் பட்டியலில் மனோகர் லால் கட்டார், சிவராஜ் சிங் சௌஹான், தர்மேந்திர பிரதான், கிசான் ரெட்டி, சுனில் பன்சால், பூபேந்திர யாதவ் எனப் பலரது பெயர்கள் அடிப்பட்டு வருகின்றன.
பெண் தேசியத் தலைவரா?
இதுவரை, பாஜக கட்சியில் பெண் தேசியத் தலைவர்கள் இருந்ததில்லை. ஆனால், இந்த முறை இருக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் முக்கியமாக மூன்று பெண் தலைவர்களின் பெயர் அடிப்படுகின்றன. அவர்கள் மூவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதுவும் இருவர் தமிழ்நாட்டில் சேர்ந்தவர்கள்.
அந்த மூன்று பெண்கள்…
1. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்;
2. பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன்;
3. ஆந்திராவின் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் டக்குபதி புரந்தேஸ்வரி.
நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக இருக்கிறார்.
வானதி சீனிவாசனை எடுத்துக்கொண்டால், அவர் ஏற்கனவே மத்திய அளவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவர் தமிழ்நாட்டில் கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். ஆனால், அவரால் அவ்வளவாக இந்தி பேசமுடியாது என்பது அவருக்கு மைனஸ்.
புரந்தேஸ்வரியை ‘தென்னிந்திய சுஷ்மா ஸ்வராஜ்’ என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு அவருக்கு பாஜக கட்சிக்குள் பெயர் இருக்கிறது.

ஆனால், இவர் பாஜக கட்சியில் சேர்ந்து இன்னும் 15 ஆண்டுகள் ஆகவில்லை. கட்சி விதிமுறைகளின் படி, தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், குறைந்தது 15 ஆண்டுகளுக்கு கட்சியின் முழு நேர உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
பாஜக முக்கிய தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸும் வானதி சீனிவாசனை ஒருமனதாக ஒத்துக்கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஆனால், இந்தப் பட்டியலில் சுதா யாதவ் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் பெயரும் இருக்கிறதாம்.
இதில் யார் அடுத்த தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படப் போகிறார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.