
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி சதமடித்து, ஐ.பி.எல்லில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்த நிலையில், தற்போது 19 வயதுக்குப்பட்டோருக்கான போட்டியில் அதிவேகமாக மற்றும் குறைந்த வயதில் சதமடித்து மேலும் சாதனை படைத்திருக்கிறார்.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, இங்கிலாந்தில் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
இதில், முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் இந்தியாவும் ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றிபெற்றிருந்தன. இந்த மூன்று போட்டிகளில் 48, 45, 86 ஆகிய ரன்களை வைபவ் சூர்யவன்ஷி அடித்திருந்தார்.
இவ்வாறிருக்க, நேற்று முன்தினம் நான்காவது ஒருநாள் போட்டி வொர்ஸெஸ்டர் நகரில் நடைபெற்றது.
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 5 ரன்ங்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்த போதிலும், வைபவ் சூர்யவன்ஷியும், விஹான் மல்ஹோத்ராவும் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினர்.
வைபவ் சூர்யவன்ஷி மொத்தமாக 78 பந்துகளில் 13 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் என 143 ரன்கள் குவித்தார்.
குறிப்பாக, 24 பந்துகளில் அரைசதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி, அடுத்த 28 பந்துகளில் சதத்தை எட்டி, 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் அதிவேக சதமடித்த வீரர் என்ற புதிய வரலாற்றைப் படைத்தார்.
இதற்கு முன்னர், 2013-ல் இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குப்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலா 53 பந்துகளில் சதமடித்ததே அதிவேக சதமாக இருந்தது.
அதை முறியடித்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் கூடுதலாக, 19 வயதுக்குப்பட்டோருக்கான சதமடித்த இளம் வீரர் (14 வயது 100 நாள்கள்) என்ற சாதனையிலும் பதிவாகியிருக்கிறது.

இதற்கு முன்னர், வங்கதேச வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 19 வயதுக்குப்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் சதமடித்த இளம் வீரராக (14 வயது 241 நாள்கள்) இருந்தார்.
மேலும், வைபவ் சூர்யவன்ஷிக்கு முன்பு 2013-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சதமடித்த ஒருநாள் இந்திய வீரர் என்ற சாதனை சர்ஃபராஸ் கான் வசமிருந்தது.
2013-ல் தென்னாப்பிரிக்காவுக்கெதிரான போட்டியில் 15 வயது 338 நாள்களில் சர்ஃபராஸ் கான் சதமடித்திருந்தார்.
இங்கிலாந்துக்கெதிரான இந்தப் போட்டியில் இந்தியா 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.