• July 7, 2025
  • NewsEditor
  • 0

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு 5.7.2024 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச்சூழலில் கடந்த 5.7.2025 அன்று ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது மனைவி பொற்கொடி தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினார்.

ஆம்ஸ்ட்ராங் மற்றும் திருமதி ஆம்ஸ்ட்ராங்

பின்னர், ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ என்ற தனிக் கட்சியையும் தொடங்கினார். கட்சியின் கொடி, கொள்கைகள் குறித்தும் அறிவிக்கப்பட்டது. பிறகு ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அமைக்கப்பட்ட அவரது முழு உருவச் சிலையை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தாயார் கமல்தாய் கவாய் திறந்து வைத்தார்.

“ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து போராடுவோம்” எனப் பொற்கொடி தரப்பு சூளுரைத்து. இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன், அன்புமணி, நயினார், தமிழிசை, வேல்முருகன், மல்லை சத்யா உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஆம்ஸ்ட்ராங் விட்ட பணியைப் பொற்கொடித் தொடரட்டும்!

நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “ஆயிரக்கணக்கான பேர் சென்னையில் இன்று வழக்கறிஞராக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் ஆம்ஸ்ட்ராங்தான். அனைத்து சமூகத்தினரையும் நேசிக்கும் ஒரு தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்” என்றார். “ஆம்ஸ்ட்ராங் சிந்திய ரத்தம் ஒருபோதும் அழிந்து ஒழியாது. ஆம்ஸ்ட்ராங் விட்ட பணியைப் பொற்கொடித் தொடரட்டும்” என்றார், ஜான் பாண்டியன்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதனவர்கள்

அன்புமணி பேசுகையில், “தமிழ்நாட்டின் பூர்வக்குடிகள் பட்டியலின, வன்னிய, மீனவ மக்கள்தான். அதிகளவில் இருக்கும் நம்மை இவ்வளவு காலம், படிப்பறிவு, பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு இல்லாமல், மதுவிற்கு அடிமையாக்கிவிட்டனர் நம்மை வாக்கு வங்கிகளாக மட்டும் ஆண்ட, ஆட்சி செய்து வருகிற அமைப்புகள் வைத்திருக்கிறார்கள்” எனக் கொதித்தார்.

இயக்குநர் ரஞ்சித், “அண்ணன் இல்லாத பெரும் துயரத்தைக் கடந்து வருவதற்குள் அவருடையக் கொள்கை வழியில் அவர் விரும்பிய சமத்துவத்தை உருவாக்க அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் துணைவியார் களமிறங்கி இருக்கிறார்” என்றார்.

பொற்கொடி தனிக் கட்சி தொடங்கியதற்கான பின்னணி குறித்து நம்மிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சியினர், “ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பிறகு பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவராக ஆனந்தனும், ஒருங்கிணைப்பாளராகப் பொற்கொடியும் நியமிக்கப்பட்டனர். ஆனால் ஆனந்தனை மீறி பொற்கொடி செயல்பட்டு வந்தார். இதில் ஆனந்தன் தரப்பு அதிருப்தியடைந்தது. பிறகு ‘பொற்கொடி கட்சியின் தலைவர் போன்று செயல்படுகிறார். எங்களை மதிப்பதில்லை’ என அகில இந்தியத் தலைமைக்குப் புகார் தெரிவித்தனர்.

ஆம்ஸ்ட்ராங்

மேலும் பொற்கொடி தரப்பை அழைக்காமல் கட்சியின் செயற்குழு கூட்டத்தை ஆனந்தன் தரப்பு நடத்தியது. அதில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கௌதம், முன்னாள் எம்.பி. ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது பொற்கொடி தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் வந்தனர். பிறகு அவர்கள் ராம்ஜீ கவுதம், ராஜாராம் ஆகியோரிடம், ‘மாநில தலைவர் ஆனந்தன் தங்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்’ எனப் புகார் அளித்தார். அதற்கு ஆனந்தன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதில் இருதரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதால் செயற்குழு கூட்டம் பெரும் களேபரமானது. இந்த விவகாரம் மாயாவதி வரை புகாராகச் சென்றது. இதையடுத்து பொற்கொடியைப் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்குவதாகக் கட்சித் தலைமை அறிவித்தது.

அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், “நமது தேசியத் தலைவர் மாயாவதியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் மத்திய ஆளும் கட்சியாக மாறுவதற்கான தனது தீர்மானத்தைப் பகுஜன் சமாஜ் கட்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில், மாநிலத் தலைவர் பி. ஆனந்தனின் வழிகாட்டுதலின் கீழ் கட்சி தொடர்ந்து வளர்ந்து வலுவடையும்.

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி - ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி – ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி

தேசிய தலைவரின் உத்தரவின்படி, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தனது குடும்பத்தினர் மற்றும் மறைந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் மட்டுமே இனி கவனம் செலுத்துவார். அவர் கட்சி விஷயங்களில் ஈடுபட மாட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் தனது கட்சிப் பணிகளைத் தொடர்வார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தமது அசைக்க முடியாத ஆதரவைத் தொடர்ந்து வழங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் பொற்கொடி தரப்பு அதிர்ச்சியடைந்தது. பிறகு அ.தி.மு.க அல்லது த.வெ.க-வுக்கு செல்லலாம் எனப் பொற்கொடி கணக்குப் போட்டார்.

அ.தி.மு.க-வில் இணைவது தொடர்பாகத் திருவள்ளூர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மாதவரம் மூர்த்தி, பெஞ்சமின் ஆகியோருடன் பொற்கொடி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாக பேசப்பட்டது. அதில் பொற்கொடிக்கு எம்.எல்.ஏ. சீட், கட்சி பதவியும் கேட்கப்பட்டது. ஆனால் எம்.எல்.ஏ சீட் கொடுக்க அ.தி.மு.க தலைமை தயாராக இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் வேண்டுமானால் பார்க்கலாம் என்றிருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி

இதில் அப்செட்டான பொற்கொடி தரப்பு விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறது. ஆனால் அங்கிருந்தும் எந்த பாசிட்டிவ் சிக்னலும் கிடைக்கவில்லை. இதையடுத்துதான் ஆம்ஸ்ட்ராங் நினைவு தினத்தில் புதிய அரசியல் கட்சியை அறிவித்திருக்கிறார், பொற்க்கொடி. ஆம்ஸ்ட்ராங் போல அவர் கோலோச்சுவரா என்பது போகபோகத்தான் தெரியும். இதற்கிடையில் ஆனந்தன் தரப்பு தனியாக முதலாமாண்டு நினைவு தினத்தை அனுசரித்து இருக்கிறது. வரும் நாட்களில் இருதரப்புக்கும் இடையிலான மோதல் அதிகரிக்கக்கூடும்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *