
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடந்தேறியது. லட்சக் கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகனைத் தரிசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினிமா பின்னணிப் பாடகரும் முருக பக்தருமான வேல்முருகன் அங்கு காவலர்கள் சிலரிடம் வாக்குவாதம் செய்கிற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக, என்ன நடந்தது என வேல்முருகனையே தொடர்பு கொண்டு கேட்டோம்.
”திருச்செந்தூர் முருகனுக்கே பொருத்தமான ‘தலையா கடல் அலையா’ங்கிற பாட்டுக்கு ஏற்ப மூணு நாளா அங்க ஜனங்க கூட்டம் அலை மோதிட்டிருக்கு. நேத்து என் கச்சேரி. அவ்வளவு மக்கள் ரசிச்சாங்க. கச்சேரிக்கு கச்சேரியுமாச்சு முருகனைத் தரிசிச்ச மாதிரியும் ஆச்சுன்னு நானுமே பாடிட்டு சாமி கும்பிட்டுட்டு என் பாட்டுக்கு தங்கியிருந்த ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுத்திட்டிருந்தேன்.
அப்பதான் டிவியிலிருந்து வர்றேன்னு ஒரு பொண்ணு வந்தாங்க. கும்பாபிஷேகம் பத்தி கச்சேரி பத்தில்லாம் பேசிட்டு யாகசாலை நடக்கிற இடத்துல போய் வீடியோ ஷூட் பண்ணலாம்னு கூப்பிட்டாங்க.
அப்பவே நான் சொன்னேன். பாதுகாப்பு ரொம்ப கெடுபிடியா இருக்கு. நாம கிடைக்கிற ஒரு இடத்துல இருந்து பேசிடலாமேனு சொன்னேன்.
ஆனா அவங்க கேக்கலை. யாகசாலை நடக்கிற இடத்துக்குப் போகலாம்னு சொல்லி கூட்டிட்டுப் போனாங்க. ஆனா அந்தப் பக்கமிருந்த சில போலீஸ்காரங்க அந்தப் பகுதியில் அனுமதிக்க மறுத்தாங்க. அவங்களைச் சொல்லியும் குத்தமில்லை. லட்சக்கணக்கான பேர் கூடியிருக்கிற இடத்துல பாதுகாப்புக் குறைபாடுனு ஏதாவது நடந்தா அவங்கதானே பொறுப்பு?

‘ஏங்க நான் சாப்பிட வரலைங்க’
நான் பேசிக் கேட்டுப்பார்க்கலாம்னு பேசிட்டிருந்த காவலர் ஒருத்தர் நாங்க அன்னதானம் நடக்கிற இடத்துக்குப் போக முயற்சி செய்யறதா நினைச்சுச் சத்தம் போட்டதுதான் எனக்கும் கொஞ்சம் கடுப்பாயிடுச்சு.
‘ஏங்க நான் சாப்பிட வரலைங்க. நேத்து இங்க என்னுடைய கச்சேரிதான் நடந்தது. நான் ஒரு பின்னணிப் பாடகர்னு சொன்னேன்.. அந்தப் போலீஸ்காரங்கல்ள்ல சிலருக்கும் என்னைத் தெரியலை. அதனால நான் ஒண்ணைச் சொல்ல அவரு பதிலுக்கு ஒண்ணு சொல்லனு சில நிமிடங்கள் அங்க பாக்குறவங்களூக்கு ஒரு வாக்குவாதம் போலவே இருந்திச்சு.
எடிட் செய்து போட்டிருக்காங்க
பிறகு என்னைத் தெரிஞ்ச சில அதிகாரிகள் வர, நிலைமை சுமூகமாச்சு.
ஆனா அதுக்குள் அந்த காட்சி சமூக ஊடகங்கள்ல வந்துடுச்சு. அதுவும் நான் காவலர்கள்கிட்டப் சத்தமா பேசற காட்சிகளை மட்டும் எடிட் செய்து போட்டிருக்காங்க.
இது என்னங்க சோதனை? கும்பாபிஷேக முடிச்சுட்டு உடனே பிளைட்டப் பிடிச்சு சென்னை வந்தா, வந்து இறங்குறதுக்குள்ளே பல நண்பர்கள்கிட்ட இருந்து போன் மேல போன். நான் ஏதோ கும்பாபிஷேகத்துல போய் வாக்குவாதம் பண்ணி கலட்டா பண்ற மாதிரி ஒரு தோற்றம் உண்டாகிடுச்சு.
என்னதான் நாம ஒதுங்கிப் போனாலும் அப்பப்ப நம்மைப் பத்தி ஏதாவது ஒரு சர்ச்சை நியூஸ் எப்படியாவது வந்திடுது. என்ன செய்யறதுன்னே தெரியலை.
கச்சேரி நல்லபடியா முடிஞ்சதில்லையா, அதுல கண் திருஷ்டி பட்ட மாதிரின்னு நினைச்சுக வேண்டியதுதான்” என்கிறார்.