
தேனி அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் சொப்ன ஜோதி, தன் கணவருடன் சேர்ந்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மத்திய அரசின் தேசிய சுகாதாரப் பணிகளின் கீழ் 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தற்காலிகப் பணியாளர்களிடம் டாக்டர் சொப்ன ஜோதி, தன் கணவருடன் சேர்ந்து லஞ்சம் பெற்று முறைகேடுகள் செய்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை.
மேலும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைத் தன்னுடைய மருத்துவமனைக்கும், பிற தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வருவதன் மூலம் பல கோடி வருவாய் ஆதாயம் பெற்றுள்ளார்.
அரசு ஊழியர் சொத்து வாங்கும்போது அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால், இவர் எந்த அனுமதியும் பெறாமல் முறைகேடாக 20 கோடி ரூபாய் அளவுக்கு அவர் பெயரிலும் கணவர் பெயரிலும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவத்துறை இயக்குநருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. உயர் நீதிமன்றமே விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், “இந்த வழக்கு குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர், லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.