
நாமக்கல்: கீழடி விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பாங்கோடு நடந்து கொண்டு வரலாற்றை மறைப்பதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ எனும் நூல் வெளியீட்டு விழா நாமக்கல் அருகே லத்துவாடியில் நடைபெற்றது. இதில் சகாயம் கலந்து கொண்டு பேசினார். விழாவைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற லாக்கப் மரணம் எந்த சூழலிலும் ஏற்றுக் கொள்ளமுடியாதது. காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மக்களை பாதுகாக்கத்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். இதில் தமிழக முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காவல் துறையினர் அத்துமீறிய செயலை மட்டுப்படுத்த வேண்டும். இதில் கவனம் செலுத்தவில்லையெனில் ஆட்சிக்கு பெரிய அவப்பெயர் வந்துவிடும். தமிழ் மொழி உலகில் உள்ள மூத்த மொழிகளில் ஒன்று.