
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சசிக்குமார் நடித்திருக்கும் ‘ஃப்ரீடம்’ திரைப்படம் இம்மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சசிக்குமாருடன் நடிகை லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைத் தொடர்ந்து, இப்படத்திலும் ஈழத் தமிழ் பேசி நடித்திருக்கிறார் சசிகுமார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சசிக்குமார் பேசுகையில், “கல்வி நிறுவன வளாகங்களில் என்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான் ‘நந்தன்’ படத்துக்கும், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்கும் அப்படி எதுவும் செய்யவில்லை.
‘ஃப்ரீடம்’ படத்தின் தயாரிப்பாளரும் அப்படி எதுவும் கேட்கவில்லை. எதிர்காலத்தில் ஒரு தயாரிப்பாளர் அதை வற்புறுத்திக் கேட்டால், அதைப் பற்றி யோசிப்பேன்.
ஆனால், தனிப்பட்ட முறையில், கல்வி நிறுவனங்களுக்குச் சென்று ‘என்னுடைய படத்தைப் பார்க்க வாங்க’ என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

இப்போது நடக்கும் மாதிரியான இடத்தில் நிகழ்வை நடத்துவது நன்றாகவே இருக்கிறது. நான் பெரும்பாலும் அறிமுக இயக்குநர்களின் படங்களில்தான் நடித்திருக்கிறேன். தோல்வியடைந்த இயக்குநர்களுக்குத்தான் வாய்ப்புக் கொடுத்திருக்கிறேன்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘போராளி’ படத்தில் நடித்தேன். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘ஃப்ரீடம்’ என்று அடுத்தடுத்த படங்களில் ஈழத் தமிழ் பேசி நடிக்கிறேன்.
‘என்ன, அடுத்தடுத்து ஈழத் தமிழ் பேசி நடிக்கிறீர்கள்?’ என்று சிலர் கேட்டார்கள். அதுவும் தமிழ்தானே, அதில் என்ன தவறு?” எனக் கூறியிருக்கிறார்.