
ரஷ்யாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இதை அதிகரிக்க ரஷ்யாவின் சில பகுதிகளில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
அதன் படி, குழந்தை பெற்றுக்கொள்ளும் பள்ளி மாணவிகளுக்கு 1 லட்சம் ரூபிள்கள் தர உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பின் படி, ரூ.1,08,595.20 ஆகும்.
இந்தத் திட்டம் ஆரம்பத்தில் ரஷ்யாவின் 10 பகுதிகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம், முதன் முதலில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்ட போது, பெண்களுக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டது. இப்போது பள்ளி மாணவிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஆதரவும், எதிர்ப்பும்!
இந்தத் திட்டத்திற்கு, ரஷ்யாவில் ஆதரவும் கிடைத்துள்ளது… எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு இந்த மாதிரி ஊக்கத் தொகை வழங்கும்போது, அது நெறிமுறைகளைக் குழைக்கும் என்று கூறுகின்றனர்.
புதின் என்ன நினைக்கிறார்?
ரஷ்ய அதிபர் புதினை பொறுத்தவரை, மக்கள் தொகை அதிகரிப்பு என்பது மிக மிக முக்கியம். காரணம், அவர் விரும்பும் ராணுவ பலத்திற்கும், ரஷ்யாவை விரிவுப்படுத்துவதற்கும் இது மிக மிக முக்கியம்.
ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் ரஷ்யா – உக்ரைன் போரினால் ரஷ்யாவில் கிட்டத்தட்ட 2.5 லட்ச ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
லட்சக்கணக்கான பேர் ரஷ்யாவில் இருந்து குடி பெயர்ந்துவிட்டனர்.
அதனால், ரஷ்யா அரசு ரஷ்ய மக்கள் தொகையை பெருக்குவது மிக முக்கியம் என்று நினைக்கிறது.
ரஷ்யா மட்டும் அல்ல அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் குழந்தை பெற்று கொள்ளும் பெண்களுக்கு சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது.