• July 6, 2025
  • NewsEditor
  • 0

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் தி.மு.க ஆட்சியில் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு வரவேண்டியது வரவில்லை என ஆதங்கப்பட்டு பேசி உள்ளார். அந்த கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “நம் ஊர்களில் பெரிய ஆலயங்களில் குடமுழுக்கு நடத்துவார்கள். கோபுர கலசத்தில் தானியங்களை வைப்பார்கள். ஒருகாலத்தில் பெரிய பஞ்சம் வந்து விதைகளே இல்லாமல்போனால், கோபுர கலசத்தில் இருந்து தானியங்களை எடுத்து விதையாக பயன்படுத்துவார்கள். அதுபோன்று காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி மாவட்டம் கோபுர கலசமாக உள்ளது. தொண்டர்கள்தான் நம் இயக்கத்துக்கு வேர்கள். வேர்கள் பலவீனமானால் நமக்கு கூட்டணியில் கேட்பது கிடைக்காது. வேர்களை பலமாக்கத்தான் கிராம கமிட்டி என்ற ஏற்பாட்டை செய்துள்ளோம். 2 லட்சம் காங்கிரஸ் தொண்டர்களை அடையாளம் கண்டு பதிவுசெய்து, அடையாள அட்டை வழங்கி உள்ளோம். தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும். செய்யாத அரசியல் புரட்சி இது.

காங்கிரஸ் நிகழ்சி

ஆட்சிக்கு வந்துவிடவேண்டும், அதிகாரத்துக்கு வந்துவிடவேண்டும் என நமக்கு ஆசை நிறைய இருக்கிறது. பல அதிகாரங்கள் நமக்கு வரவே இல்லை. கோயில் அறங்காவலர்கள் வரவில்லை. கூட்டுறவு சங்க தலைவர் பதவிகள் வரவில்லை, ஒரு ரேஷன்கடை அமைப்பாளர் வரவில்லை, சத்துணவு அமைப்பாளர் கேட்டால்கூட யாரும் பரிசீலிக்கவில்லை. காங்கிரஸ்  இல்லாமல் வெற்றிபெறமுடியாது என்ற நிலையை களத்தில் நாம் எப்போது உருவாக்குகிறோமோ, அப்போதுதான் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கடந்தமுறை சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சியில் இருக்கும் தி.மு.க-விடம் பேச தலைவர் போகிறார். அப்போது அவர்கள் முதல்கேள்வியாக, உங்களுக்கு அங்கு ஆளே இல்லையே, கட்சியே இல்லையே என்பார்கள். இனி அவர்கள் அப்படி எல்லாம் பேசமுடியாது. 2 லட்சம் நிர்வாகிகளின் பட்டியலை காரில் வைத்துக்கொண்டுதான் கூட்டணி பேரம்பேசுவதற்கே தலைவர் போவார். நம்மிடம் இருப்பதை வைத்துதான் மரியாதை.

பீட்டர் அல்போன்ஸ்

நாம் பலமாக இருந்தால் கூட்டணிக்கு பலம். கூட்டணி பலமாக இருக்க வேண்டும், ஆட்சியில் அமரவேண்டும், முதல்வராக ஸ்டாலின் ஆட்சிக்கட்டிலில் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதே நேரத்தில் நம்முடைய அதிகாரத்தை குறைக்கவும் நாம் தயாராக இல்லை. எங்கள் சகோதரர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் மரியாதையோடு, அங்கீகாரத்தோடு மக்கள் மத்தியில் செல்ல வேண்டும்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *