
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து வருகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவினர் படத்தின் பி.டி.எஸ் (பின்னணி) வீடியோவை வெளியிட்டிருந்தனர்.
அந்தக் காணொளி இணையத்தில் வைரலானது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
படத்தை முதலில் அறிவிக்கும்போது, லைகா நிறுவனம் மட்டுமே தயாரிப்பாளராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிறகு வெளியான படத்தின் பி.டி.எஸ் வீடியோவில், லைகா நிறுவனத்துடன் ‘ஜே.எஸ்.ஜே மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் தயாரிப்பாளர்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது ஜேசன் சஞ்சய் புதிதாகத் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் என அப்போது பேசப்பட்டது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் அப்போது வெளியாகவில்லை.
தற்போது, இந்தத் தயாரிப்பு நிறுவனம் ஜேசன் சஞ்சய்யால் தொடங்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம், அவர் தனது தயாரிப்பு நிறுவனத்தை நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து புதிய உறுப்பினராக இணைந்திருக்கிறார்.

மாதந்தோறும் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியாகும் பத்திரிகையில், கடந்த மாதம் சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில் ஜேசன் சஞ்சயின் பெயரும், அவரது தயாரிப்பு நிறுவனமான ‘ஜே.எஸ்.ஜே மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ பெயரும் இடம்பெற்றுள்ளன.