
சென்னை: அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைக்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விடுபட்டவர்கள் இதில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் திட்டம் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற, ஊரக பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவதுதான் இதன் நோக்கம்.