
தாய்லாந்தில் நான்கு வயது இரட்டையர்களுக்கு திருமணம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தின் கலாசின் மாநிலத்திலுள்ள ப்ரச்சயா ரிசார்டில் (Prachaya Resort) நான்கு வயது இரட்டையர்களுக்குள் திருமணம் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
தட்சனப்போர்ன் சோர்ன்சாய் மற்றும் தட்சதோர்ன் என்ற இரட்டையர்களுக்கு தான் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
வைரலாகும் வீடியோவின்படி,இந்த திருமண நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றும் புத்த துறவிகள் கலந்து கொண்டுள்ளனர்.
சிறுமி தன் இரட்டையர் சகோதரரின் கன்னத்தில் முத்தமிட்டு, பிறகு திருமண சடங்குகளைச் செய்து முடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதை தொடர்ந்து புத்த துறவிகள் குழந்தைகளை ஆசீர்வதித்தனர்.
இந்த திருமண நிகழ்வு ஜூன் 28ஆம் தேதி நடைபெற்றதாக சிங்கப்பூரைச் சேர்ந்த Must Share News தெரிவித்துள்ளது. திருமணத்தின் போது குடும்பம் நான்கு மில்லியன் பாத் பணம் மற்றும் தங்கம் வரதட்சணையாக அளித்ததாக கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது. சிலர் இதனை ஒரு கலாசார மரபாக ஏற்றுக்கொண்டாலும், சிலர் விமர்சித்து வருகின்றனர்.
Thai family holds "wedding" for twin children
May the twins grow up with all the blessings this symbolic ceremony hopes to bring. ✨ pic.twitter.com/pNUSzc4Hop
— MustShareNews (@MustShareNews) July 4, 2025
இதுபோன்ற இரட்டையர் திருமணம் தாய்லாந்தில் ஒரு சடங்காக கருதப்படுகிறது.
தாய்லாந்து மக்களின் நம்பிக்கையின்படி, இதுபோன்ற பெண்-ஆண் இரட்டையர்கள் கடந்த ஜென்மத்தில் காதலர்களாக இருந்தவர்கள் என்றும், அவர்கள் இந்த ஜென்மத்தில் இரட்டையர்களாக பிறந்ததால், எதிர்காலத்தில் ஏற்படும் துன்பங்கள், நோய்கள் போன்ற கெட்ட விஷயங்களை தவிர்க்க இந்த சடங்கு நடத்தப்படுவதாக நம்பப்படுகிறது.
இது பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நலன் தரும் என்றும் அவர்களது வாழ்க்கை இனிமையாக அமையும் என்றும் குடும்பத்தினர் நம்புகின்றனர்.10வது பிறந்தநாளுக்கு முன் இச்சடங்கு நடத்தப்பட வேண்டும் என்பதே அங்குள்ள மரபாகும்.
இந்த திருமணம் சட்டபூர்வமாக செல்லுபடியாகாது என்பதும், இது வெறும் சடங்காக மட்டுமே நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.