• July 5, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரத்தில் நல்லதங்காள் கோயில் அமைந்துள்ளது. இந்த நல்லதங்காள் தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும், அண்ணன், தங்கை உறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அவர் வாழ்ந்த 15-ம் நூற்றாண்டில் நாட்டில் நிலவிய கடும் பஞ்சம் காரணமாக பசியால் துடித்த தனது ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி தானும் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்ட கிணறு அவர் தங்கிய இடம் ஆகியவை நினைவுச் சின்னமாகவும், கோயிலாகவும் மக்களால் வழிபடப்பட்டு வருகிறது.

உடைந்த நல்லதங்காள் சிலையால் பக்தர்கள் வேதனையில்..

அக்கோயிலில் நல்லதங்காள் பத்திரகாளியம்மன் வடிவில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும் குழந்தை வரம் வேண்டி ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். நெல் வயல்களுக்கு மத்தியில் கண்மாய் கரையை ஒட்டி தனியே அமைந்துள்ளதால் மாலை 3 மணிக்குள் கோயில் பூட்டப்பட்டு விடும்.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி கருவறையின் கதவுகள் உடைக்கப்பட்டு நல்லதங்காள் சிலை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கப்பட்டு கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து பொதுமக்களின் புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த ஆறு மாதமாக சிலையில்லாமல் கோயில் களையிழந்து காணப்படுவதாகவும், இதனால் தாங்களே சிலை வைத்து கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்திக் கொள்ள அர்ச்சனாபுரம் கிராம மக்கள் இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்டு வருகின்றனர்.

ஆனால் துறை ரீதியான நடவடிக்கைகள் மிக மந்தமாக இருப்பதாகவும் அனுமதி வழங்க ஆறு மாதத்திற்கு மேல் எடுத்துக் கொள்கிறார் என அர்ச்சனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்

இதனால் இந்து சமய அறநிலைதுறையை கண்டித்து வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் அர்ச்சனாபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது புதிதாக செய்யப்பட்டுள்ள நல்லதங்காள் சிலையை கோயிலில் வைத்து, கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *