
2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கை, தெருமுனை பிரசாரங்களை தொடங்கிவிட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவுள்ளார்.
திமுக, அதிமுக கூட்டணிகள் டாப் கியரில் பயணிக்க, தவெகவும் தங்களது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. இதில் கோவை மாவட்ட அரசியல் களம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை யாருக்கு?
பொதுவாக கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோவை மாவட்டம் திமுகவுக்கு சாதகமாக இருந்ததில்லை. கடந்த 5 சட்டமன்ற தேர்தல்களாகவே அங்கு அதிமுக தான் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது.

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் திமுக வெல்ல, கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் அதிமுகவே அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போதிருந்து கோவை மீது திமுக தனி கவனம் செலுத்தி வருகிறது. செந்தில் பாலாஜியை கோவை பொறுப்பாளராக நியமனம் செய்தது.
2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலிலும் செந்தில் பாலாஜியையை நம்பியே கோவையில் திமுக தலைமை களம் காண்கிறது. செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்தவரை அவர் தான் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்தார்.

தற்போது அவர் அமைச்சரவையில் இல்லாத நிலையில் கோவைக்கு பொறுப்பு அமைச்சர் நியமிக்கப்படவில்லை. அதாவது கோவையின் ஒரே பவர் சென்டராக தான் மட்டுமே இருக்க வேண்டும் என செந்தில் பாலாஜி நினைக்கிறார். திமுக தலைமையும் அதில் தலையிடுவதில்லை.
தற்போது மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளுக்கும் ஆய்வு கூட்டம் நடத்திவிட்டார். தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பகுதி, நகரம், ஒன்றியம் ஆகியவற்றை பிரித்துள்ளனர். 2 வார்டுகளுக்கு ஒரு பகுதி செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் வார்டுகளும் பிரிக்கப்பட உள்ளன.

தற்போது ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு பூத்துக்கு 30 சதவிகிதம் வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க திமுக தலைமை டார்கெட் நிர்ணயித்துள்ளது. செந்தில் பாலாஜியோ கோவையில் ஒரு பூத்துக்கு 40 சதவிகிதம் வாக்காளர்கள் வீதம், தொகுதிக்கு 1 லட்சம் உறுப்பினர்களை இணைக்க டார்கெட் கொடுத்துள்ளார்.
தேர்தல் பணிகளுக்காக ஒரு பூத் கமிட்டிக்கு 10 நிர்வாகிகள் உள்ளனர். தேர்தல் நெருங்க நெருங்க கரூர் டீமும் களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த காலங்களில் விட்ட செல்வாக்கை இந்த முறை பிடித்தாக வேண்டும் என்கிற முனைப்பில் பணியாற்றி வருகிறார்கள்.

அதேநேரத்தில் உள்கட்சி பூசல், பகுதி பிரிக்கப்பட்டதில் திமுகவுக்கு பின்னடைவு. மறு முனையில் அதிமுக – பாஜக கூட்டணி கோவையில் சற்று செல்வாக்குடன் இருப்பதால் திமுகவின் வெற்றி அவ்வளவு எளிதாக அமைந்துவிடாது.
அதேநேரத்தில் கோவை மாவட்டத்தில் தங்களின் செல்வாக்கை நிரூபிப்பதற்காக அதிமுகவும் முனைப்பு காட்டி வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணி மற்ற பகுதிகளை விட இங்கு சற்று வலுவாகவே உள்ளது. ஏற்கெனவே கோவையின் 10 தொகுதிகளிலும் அவர்கள் தான் சிட்டிங் எம்எல்ஏக்களாக உள்ளனர்.

கடந்த 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகியவை அதிமுகவுக்கு சாதகமாகவில்லை. இந்நிலையில் கட்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த இடத்தில் இருப்பதால், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தன் பவரை தக்க வைக்க கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
ஒரு பூத் கமிட்டிக்கு 10 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். தொகுதி வாரியாக பூத் கமிட்டி ஆய்வுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் தேர்தலை ஒட்டி எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் கோவை மாவட்டத்தில் இருந்துதான் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

வருகிற திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை ஆகிய இரண்டு நாள்கள் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் தான் இருக்கிறார். ரோட் ஷோ, விவசாயிகள், பொது மக்களிடம் கலந்துரையாடல் என்று வேலுமணி பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளார். சற்று மந்தமாக இருந்த எம்எல்ஏக்களும் தொகுதிக்குள் ஆக்டிவாகிவிட்டனர்.
வேலுமணி தனது பவரை நிரூபிக்க பட்டை தீட்டினாலும், கட்சி தொண்டர்களிடம் பழைய உற்சாகம் மிஸ்ஸிங். வேலுமணி, மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனன் மீது அதிருப்தியும் நிலவுகிறது. முக்கியமாக கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் அதிமுகவினர் தான் சிட்டிங் எம்எல்ஏக்களாக உள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளாக அவர்களின் செயல்பாடு சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை. தவெக பிரிக்கும் வாக்குகளும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கடந்த காலங்களை போல கோவை மாவட்டம் முழுவதிலும் அப்படியே அதிமுக வெற்றி பெறுவது எளிதல்ல என்பது தான் தற்போதைய கணக்கு.