
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி கட்சியினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக தொடர்ந்து தமிழக மக்களையும் தமிழக நலனையும் புறக்கணிக்கிறது. நடிகர் விஜய், பாசிச பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது.
கால் பதிக்க இடம் கிடைக்காதா என பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் துடித்து கொண்டு இருக்கிறார்கள். யாரும் அதற்கு வழி ஏற்படுத்திவிடக் கூடாது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எத்தனை தொகுதிகள் கூட்டணி போன்ற விஷயங்களை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் வேறு கட்சிகள் கூட்டணிக்குள் வருவதாக இருந்தால் தமிழகத்தில் எங்களது கூட்டணிக்கு தலைமை வகிகக்கூடிய தமிழக முதலமைச்சர் முடிவு செய்வார்.
தமிழக அரசு, தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவேற்றியுள்ளது. தமிழக மக்களுக்கு எது தேவையோ அதை இந்த அரசு செய்து வருகிறது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியில் நிறைவேற்றாமல் உள்ள 10% வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அ.தி.மு.க., கஜானாவை காலி செய்த போதும், அதனை திறமையாக தமிழக அரசு கையாண்டு வருகிறது. தமிழகத்தில் கோவில் சொத்துகள் ரூ.4,000 கோடி சொத்துகளை மீட்டு எடுத்துள்ளனர். 3 ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடத்தியுள்ளனர். திமுக அரசின் மீது குறை செல்வதற்கு ஒன்றும் இல்லை. மக்களின் நலனுக்காக வாழ்விற்காக தமிழக முதலமைச்சர் 24 மணி நேரம் செயல்பட்டு வருகிறார்.” என்றார்.