
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த 22 பேர் துக்க நிழவு ஒன்றில் பங்கேற்பதற்காக தனியார் வாடகை வேன் மூலம் நேற்று காலை ஊட்டிக்குச் சென்றிருக்கிறார்கள். துக்க நிகழ்வை முடித்துக் கொண்டு குன்னூர் மலைப்பாதை வழியாக நேற்று இரவு குளித்தலைக்கு திரும்பியிருக்கிறார்கள்.
குறும்பாடி அருகில் வேன் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியிருக்கிறது. இதைக்கண்டுப் பதறிய பயணிகள் அலறித்துடித்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அதிவேகமாக இடதுபக்க சுவரில் வேன் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. வேனுக்குள் இருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டதில் பலருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது.
ரத்தம் சொட்ட வலியால் துடித்துக் கொண்டிருந்த பயணிகளை மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், படுகாயமடைந்த ஒருவர் மட்டும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர், ” கீழ்நோக்கி சென்றுக்கொண்டிருந்த வேனில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை. இடதுபுற தடுப்பு சுவற்றில் மோதி வேனை நிறுத்தியிருக்கிறார் ஓட்டுநர் . வலதுபுற பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். 14 பேர் காயமுற்ற இந்த விபத்தில் குளித்தலையைச் சேர்ந்த 44 வயதான சாமிநாதன் என்பவர் மட்டும் துரதிஷ்டவசமாக உயிரிழந்திருக்கிறார். இதுபோன்ற மலைப்பாதைகளில் 2- ம் கியரில் கீழே இறங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்றனர்.