
காதல் திருமணம் செய்துகொண்ட கோகுல் (சிவா), குளோரி (கிரேஸ் ஆண்டனி) ஆகியோரின் பத்து வயது மகன் அன்பு (மிதுன் ரியான்). பொருளாதாரத் தேடல்களில் இருக்கும் இருவரும் அன்புவைத் தனியாக வீட்டில் விட்டுச் செல்கின்றனர். ஒரு கட்டத்தில் பிடிவாதம் கொண்ட அன்புவை அழைத்துக் கொண்டு, அன்றாடங்களில் இருந்து விடுபட்டு நீண்ட 'பைக் ரைடு'க்குச் செல்கிறார் கோகுல். அந்தப் பயணம்அவர்களுக்கு எதைப் புரிய வைக்கிறது? அங்கு சந்திக்கும் மனிதர்கள், என்ன மாற்றத்தை அவர்களுக்குள் ஏற்படுத்துகிறார்கள் என்பது கதை.
பொருளாதார தேடலுக்குப் பின்னால் பரபரத்து ஓடும் அவசர வாழ்க்கையில் குழந்தைகளின் உலகத்தையும் ஆசைகளையும் எளிதாக மறந்து விடுகிறார்கள், பெற்றோர்கள். அவர்களின் எதிர்காலத்துக்காக அதிக செலவு செய்து படிக்க வைத்தாலும் தேவைகளை காஸ்ட்லியாக செய்தாலும் குழந்தைகளின் மனது அதில் இல்லை. அவர்கள் தங்கள் இயல்பை, 'குழந்தைமை'யைத் தேடுகிறார்கள் என் பதை, நகைச்சுவையோடும் அக்கறையோடும் உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறது படம்.