
பீகாரில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி பெண்களை கவர புதிய யுக்தியை கையாள ஆரம்பித்து இருக்கிறது.
பெண்களுக்கு சானிட்டரி பேட் இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் இத்திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் 5 லட்சம் பெண்களுக்கு இதனை வழங்க திட்டமிட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சானிட்டரி பேக்கில் ராகுல் காந்தியின் புகைப்படத்தையும் போட்டு ரூ.2500 வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தது. இது குறித்து ராஜேஷ் குமார் கூறுகையில்,”தேர்தல் கமிஷன் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான வாக்காளர்கள் பட்டியல் நீக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் மகளிரணி தலைவர் அல்கா லம்பா சானிட்டரி பேட்களை விநியோகம் செய்து பேசுகையில், ”பீகாரில் 80 சதவீதம் பெண்களுக்கு சானிட்டரி பேட் கிடைக்காமல் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
பீகார் அரசு பெண்களுக்கு சானிட்டரி பேட் வாங்க ஆண்டுக்கு ரூ.300 வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 22.58 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். சானிட்டரி பேடில் ராகுல் காந்தியின் புகைப்படம் இடம் பெற்று இருப்பதை பா.ஜ.க கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி அளித்த பேட்டியில், “மகளிருக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் பாக்கெட்களில் ராகுல் காந்தியின் புகைப்படம் உள்ளது. இது பிஹார் மாநில பெண்களை அவமதிப்பதாகும். மகளிருக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் உள்ளது. வரும் தேர்தலின்போது பிஹார் மாநில பெண்கள், காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு பாடம் கற்பிப்பார்கள்’’ என்று தெரிவித்தார்.