
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 நாடுகளை எதிர்கொண்டோம் என்று இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த ஃபிக்கி நிகழ்ச்சியில் இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியதாவது:
பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது. முதலில் 21 தீவிரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டன. கடைசி நேரத்தில் 9 முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த முகாம்கள் துல்லிய தாக்குதல்கள் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டன.