• July 4, 2025
  • NewsEditor
  • 0

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இலங்கையின் மலைப்பிரதேசங்களில் தேயிலை, காஃபி பயிர்களுக்கான பெருந்தோட்டங்கள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டன. காடு, மலைகளை‌ அழித்து தோட்டங்களை உருவாக்க தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை அடிமைகளாகவும் ஆசை வார்த்தைகளைச் சொல்லியும் இலங்கைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது அப்போதைய பிரிட்டிஷ் அரசு.

டிராக்டரில் இறுதி ஊர்வலம்

சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையின் மலையகத்தில் இருந்த லட்சக்கணக்கான தமிழர்களை கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றிது இலங்கை அரசு. 1964 – ல் ஸ்ரீமாவோ – சாஸ்த்திரி ஒப்பந்தம் மூலம் மீண்டும் தாய்நாடு திரும்பிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் உருவாக்கப்பட்டது. நீலகிரி‌ மாவட்டம் மற்றும் வால்பாறையில் உருவாக்கப்பட்ட அரசு தேயிலை தோட்டங்களில் தாயகம் திரும்பிய தமிழர்கள் பல ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். டேன் டீ நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்லி மிகவும் மோசமான குடியிருப்புகளிலும் அடிப்படை வசதிகள் இன்றியும் குறைவான கூலிக்கு பணியாற்றி வருகின்றனர் இந்த மக்கள்.

எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி… கடுமையான மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்களுக்கு மத்தியில் பணியாற்றி வரும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வலியுறுத்தி தொழிலாளர்கள் போராடி வரும் நிலையில், தொழிலாளர்களின் இறுதி ஊர்வலத்திற்கு தேயிலை மூட்டைகளை ஏற்றும் லோடு டிராக்டர்களை அனுப்பி வைக்கும் அரசின் செயல் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டிராக்டரில் இறுதி ஊர்வலம்

துயரம் குறித்து தெரிவித்த கூடலூர் பகுதி தொழிலாளர்கள், “அரசு தேயிலை தோட்ட நிர்வாகம் அதன் கடைநிலை ஊழியர்களை ஒருபோதும் மனிதர்களாக கருதியதில்லை. நஷ்டம் என்கிற பெயரில் கொத்தடிமைகளைப்‌ போல நடத்தி வருகிறது அரசு. இந்த தேயிலை தோட்டத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலம் தினக்கூலியாக பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த பெண் தொழிலாளியின் உடலை அடக்கம் செய்ய டிராக்டரை அனுப்பி வைத்தார்கள். கொட்டும் மழையிலும் நனைந்தபடியே கொண்டுச் சென்று அடக்கம் செய்தோம். எங்களுக்கும் வேறுவழியில்லை. 5 ரூபாய் கூலிக்கு இங்கு வேலையில் சேர்ந்து சாகும் வரை உழைத்து தேயிலைச் செடிகளுக்கு உடலையும் உரமாக்கும் தொழிலாளர்களின் இறுதி ஊர்வலத்திற்கு கூட தேயிலை மூட்டைகளை ஏற்றும் லோடு டிராக்டர்களை அனுப்பி வைக்கிறது அரசு. மனித உடலுக்கு செலுத்த வேண்டிய சராசரி மரியாதை கூட கிடையாது. அதிகாரிகளுக்கு என்றால் இப்படி செய்வார்களா ?இதற்கு தான் எம்.பி, எம்.எல்.ஏ, கலெக்டர் என எல்லாரும் இருக்கிறார்களா? தனியார் பெருந்தோட்டங்களில் கூட இந்த அநியாய முறை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால், அரசு தோட்டத்தின் அவலத்தைப் பாருங்கள்” என கண்ணீர் வடிக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *