
சென்னை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் நாகவள்ளி. இவர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் 2.7.2025-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “என் கணவர் பெயின்டிங் வேலை செய்து வருகிறார்.
என்னுடைய மகள் அர்ச்சனாவை மாதவரத்தைச் சேர்ந்த விஜயகுமாருக்கும் திருமணம் செய்ய இருவீட்டினரும் முடிவு செய்தோம்.
அதைத் தொடர்ந்து நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கடந்த 2.7.2025-ம் தேதி காலை, பெசன்ட் நகரில் உள்ள சர்ச்சில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு மணமக்களை வீட்டுக்கு அழைத்து வந்தோம்.
பின்னர் என்னுடைய மகள் அர்ச்சனா, அழகு நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர், ஏற்கெனவே அவர் காதலித்து வந்தவருடன் சென்றுவிட்டார். அப்போது அவர் திருமணத்தின்போது அணிந்திருந்த கூறைப்புடவை, வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்திருந்தார்.
எனவே என்னுடைய மகளைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மணமகள் மாயமானதால் 2-ம் தேதி மாலை நடைபெறவிருந்த வரவேற்பு ரத்து செய்யப்பட்டது. மணமகள் மாயமானதால் தாலி கட்டிய கணவரும் அவரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து திரு.வி.க நகர் போலீஸார் கூறுகையில், “மணமகளைக் காணவில்லை என அவரின் அம்மா நாகவள்ளி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மாயம் என வழக்குப்பதிவு செய்திருக்கிறோம்.
நாகவள்ளி கொடுத்த புகாரிலேயே தன்னுடைய மகள், காதலனுடன் செய்திருப்பதாகக் கூறியிருக்கிறார். அதனால் இருவரையும் விசாரணைக்கு அழைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இருவரும் மேஜர் என்பதால் சட்டப்படி அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்றனர்.