
ஹெட்போன்கள்/ இயர்போன்கள் இன்று நம் வாழ்வின் ஒரு அங்கமாக காதோடு காதாகிவிட்டது. வேலையோ, ஓய்வோ, பயணமோ அல்லது உடற்பயிற்சியோ எல்லா சூழ்நிலையிலும் காதில் இசையை ஒலிக்கவிட்டவாறு உலா வருகிறோம். தொழில்நுட்ப உலகில் அசுரத்தனமான வளர்ச்சியைக் கண்டிருக்கும் இந்த ஹெட்போன்களின் வளர்ச்சியை, அதன் கடந்த 100 ஆண்டுகள் பயணத்தைக் கொஞ்சம் திரும்பி பார்ப்போம்.
ஹெட்போன்கள் இசையைக் கேட்பதற்காக கண்டுபிடிக்கப்படவில்லை. 1890களில், தொலைபேசி ஆபரேட்டர்கள் குறைந்த சத்தத்தில், அருகில் இருப்பவர்களுக்கு கேட்காதவாறு மிகப்பெரிய அளவிலான ஸ்பீக்கரை காதின் அருகில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். அதைக் கொஞ்சம் டாக்டர்கள் ஸ்டெதாஸ்கோப் போல வடிவமைத்து காதில் வைத்துக்கேட்கும் அளவிற்கு வடிவமைத்து பயன்படுத்தித் தொடங்கினர் தொலைபேசிகளின் ரிசீவர்களைப் போல. இவை பின்னாளில் எலெக்ட்ரோ போன்கள் என்று அழைக்கப்பட்டது. அங்கிருந்துதான் ஹெட்போன்களுக்கான ஐடியாக்கள் பிறந்தது.
இந்த ஸ்டெதாஸ்கோப் வடிவிலான ஹெட்போன்கள் தொலைத் தொடர்புக்காக இராணுவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அப்போதிருந்த தொலைபேசி ஸ்பீக்கரை வைத்துப் பயன்படுத்தியதால் எதிரிலிருந்து பேசுபவர்களின் குரல் இரச்சலுடன் கேட்கமுடியாதவாறு இருந்திருக்கிறது. 1910ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் நதானியேல் பால்டுவின் என்பவர்தான் தெளிவான குரலைக் கேட்க இரச்சல் இல்லாத ஹெட்போனை உருவாக்கினார். வீட்டிலேயே சமையல் மேசையில் இந்த ஹேட்போன்களை கைகளாலேயே செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
நதானியேல் பால்டுவினின் ஹெட்போன்கள் பயன்படுத்துவதற்கும், நடைமுறைக்கும் சாத்தியமில்லாதது என்று அதை யாரும் விலை கொடுத்து வாங்குவதற்கு முன்வரவில்லை. 1915ம் ஆண்டு முதல் உலகப்போர் சமயத்தில் அமெரிக்க கடற்படை இராணுவம் பரிசோதனை முறையில் 100 ஜோடி ஹெட்போன்களை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கின.
தொலைத்தொடர்புகளில் இவை மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், இராணுவத்தில் இந்த ஹெட்போன்கள் அதிகளவு பயன்பாட்டிற்கு வந்தன. குறிப்பாக, இராணுவ விமானங்களில் பெரும் உதவியாக இருந்தன.

1920–40 வாக்கில் வானொலிகள் பிரபலமடைந்தன. அதோடு சேர்ந்து இந்த ஹெட்போன்களும் வானொலிகளில் பயன்படுத்தப்பட்டு மக்களிடையே பயன்பாட்டிற்கு வரத்தொடங்கி பிரபலமடைய ஆரம்பித்தன. வானொலியில் குரல் மட்டுமின்றி இசையும் ஒலிக்க, இசையைக் கேட்பதற்காக காதுகளுக்கு ஏற்றவாறு எடைக் குறைவான, பஞ்சு வைத்த ஹெட்போன்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
Beyerdynamic, AKG உள்ளிட்ட நிறுவனங்கள் இசையை இரைச்சலின்றி இனிமையாகக் கேட்க ஸ்பீக்கர் ட்ரைவர்களைக் கொண்டுவந்தனர். இந்த ட்ரைவர்கள் தெளிவான இசையை தரமான ஆடியோ ஃபார்மேட்டில் (Hi Res) ஒலித்தன. ஒரு ட்ரைவர்களிலும் ஒரேமாதிரி கேட்கும் மோனோ வடிவங்கள் மாற்றப்பட்டு இடது, வலது என மாற்றி மாற்றி அலையாகப் பாயும் ஸ்டீரியோ வடிவங்களும், டைனமிக் ட்ரைவர்களும் கொண்டுவரப்பட்டன. 1958ம் ஆண்டு ஜான் கோஸ் என்பவர்தான் இந்த ஸ்டீரியோ பார்மேட்டை உருவாக்கியவர். இந்த டைனமிக் ட்ரைவர்கள்தான் இன்றுவரை பயன்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.
1979ஆம் ஆண்டு வாக்கில் சோனி நிறுவானம் ஹெட்போன்களுடன்கூடிய வாக்மேன்களை அறிமுகப்படுத்தியது. அதுதான் ஹெட்போன்களை எல்லோர் இல்லங்களுக்கும் கொண்டு சென்றது. ஒரிரு ஆண்டுகளில் 400 மில்லியன் யுனிட்கள் விற்றுத் தீர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம் இசையை செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே எடுத்துச் செல்லும் கலாசாரமும் வளரத் தொடங்கியது. அந்த சமயத்தில்தான் 3.5mm ஹெட்ஜேக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
ஹெட்போன் டு இயர்போன்
1990ம் ஆண்டு வாக்கில் Walkman, Discman, MP3 பிளேயர்களுடன் தலைமேல் அணியும் ஹெட்போன்கள் கொஞ்சம் கனமாக இருப்பதால், செல்லும் இடங்களுக்கெல்லாம் எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான காதுக்குள் மாட்டிக் கொள்ளும் சிறிய இயர்பட்ஸ் அமைப்பிலான இயர்போன்கள் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கின. சோனி, சென்ஹெய்சர், ஏ.கே.ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் கோலோச்ச தொடங்கின.

சவுண்ட் இன்ஜினியரிங்
ஸ்டுடியோவில் மாஸ்டர் செய்யப்படும் சவுண்ட் இன்ஜினியரிங்கை ட்யூன் செய்து, ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான சவுண்ட் இன்ஜினியரிங்கை வடிவமைத்துக் கொண்டன. சிலருக்கு துல்லியமான, சமமான (Flat) இசை கேட்பது பிடிக்கும், சிலருக்கு ‘V’ வடிவிலான கொண்டாட்டமான இசை கேட்பது பிடிக்கும்.
சோனி நிறுவனம் பெரும்பாலும் இசையை கொண்டாட்டமாக ரசிப்பவர்களுக்காக ‘V’ வடிவிலான சவுண்ட் இன்ஜினியரிங்கை வடிவமைத்துக் கொண்டது. சென்ஹெய்சர் நிறுவனம் ஆடியோ மானிட்டரிங்கிற்கு ஏற்றபடி துல்லியமான, சமமான (Flat) சவுண்ட் இன்ஜினியரிங்கை வடிவமைத்துக் கொண்டது. இப்படியாக ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான சவுண்ட் இன்ஜினியரிங்கை தங்களின் ஹெட்போன்களில் கொண்டுவந்தன. இதற்கேற்றவாறு அலுமினியம், அலாய், காப்பார், மரப் பொருட்கள், பிளாஸ்டிக் என பல வகையான மெட்டீரியர்களால் செய்யப்பட்ட ஹெட்போன்களும் தயாரிக்கப்பட்டன. டாக்டர் அமர் போஸ் 1989 ஆம் ஆண்டு சத்தம் குறைக்கும் ஹெட்ஃபோன்களைக் கண்டுபிடித்தார்.

EDM, IEM
பிறகு EDM, IEMஎன இரண்டு பிரிவுகள் ஹெட்போன் சவுண்ட் இன்ஜினியரிங்கில் வந்தன. EDM – கொண்டாட்டமான இசைக்கு, IDM – ஆடியோ மானிட்டரிங்கிற்கு ஏற்றபடி துல்லியமான, சமமான (Flat) இசைக்கு என ஹெட்போன்கள் பிரித்துத் தயாரிக்கப்பட்டன. ஹெட்போன்களில் சவுண்ட் இன்ஜினியரிங் தொழில்நுட்பம் தனித்துறையாகவே பரிணமிக்கத் தொடங்கியன. ஃபிரிக்குவன்சிக்கு ஏற்றபடி பல வகையான வயர்களும், பின்களும் (Pin) வகைவகையாக வந்தன.
ஆடியோ ஃபார்மெட்கள்
ஹெட்போன்களில் தரம்குறையாத ஆடியோக்களைக் கேட்க ‘PCM / WAV / FLAC’ என பல ஆடியோ ஃபார்மெட்கள் இருக்கின்றன. 16, 24, 32 bit என ஆடியோக்கள் தரப்படுத்தப்ட்டன. அவற்றைக் கேட்பதற்கான ஹெட்போன்கள், மியூசிக் ப்ளேயர்கள், ஆம்ப்கள் என செலவுமேல் செலவு வைப்பவை. ரூ.10,000 முதல் ஒரு கோடி வரை என ஹெட்போன்களின் விலை விண்ணைத் தொடுகின்றன.
நாம் கேட்பவை பெரும்பாலும் 16 bit ஆடியோக்கள்தான். எளிதான, எதிலும் பொருந்தும் ஃபார்மெட்டாக MP3தான் பிரபலமானது. அதற்கான ஹெட்போன்களும் விலைக் குறைவுதான்.

வயர்லெஸ் ஹெட்போன்களின் யுகம்
பின்னர் புளூடூத் (Bluetooth) அறிமுகமாகி, டேட்டாக்களை பரிமாற்றம் செய்ய பயன்பட்டது. பின்னாளில் வளர்ந்து தொலைபேசி, இசையை வயர் இல்லாமல் கேட்பதற்கு பிரபலமானது. வயரை விடவும், வயர்லெஸ்ஸில் இசையின் தரம் குறைவுதான். அதிகமான தரமிழப்பு இருக்கும். இருப்பினும், எளிதில் செல்லும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்று பயன்படுத்த இலகுவாக இருப்பதாலே இசையின் தரத்தைவிடவும், வசதிக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்று இந்த வயர்லெஸ் ஹெட்போன்கள், இயர் பட்ஸ்கள் மிகப்பிரபலமாகிவிட்டது. இசையின் தரத்திற்கு வயர், வசதிக்கு வயர்லெஸ் என்றாகிவிட்டது.
வயர்லெஸ்ஸின் இசையின் தரமிழப்பை ஈடு செய்ய ‘SBC, aptX, aptX HD, LDAC, AAC, M4A’ எனப் பல வயர்லெஸ் ஆடியோ ஃபார்மேட்கள் வந்த வண்ணமிருக்கின்றன. அதற்கேற்றவாறு ஆயிரமாயிரம் இயர்பட்ஸ்கள், வயர்லெஸ் ஹெட்போன்கள் மார்கெட்டிற்கு வந்த வண்ணமிருக்கின்றன. இதுதவிர வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் ANC, 360 டிகிரியில் கேட்கும் ‘Spatial audio’, காட்சியில் இருக்கும் நகர்வுகளுக்கு ஏற்றவாரு ஒலிக்கும் ‘Augmented Reality Audio’ என ஹெட்போன்களின் தயாரிப்பும், அதன் சவுண்ட் இன்ஜினியரிங்கும் வளர்ச்சிமேல் வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது.

இன்றைய மார்க்கெட்டில் நூறு ரூபாய் முதல் கோடி ரூபாய் வரையிலும் ஹெட்போன்கள், இயர்பட்ஸ்கள் வந்த வண்ணமிருக்கின்றன. இசையைத் துல்லியமாகக் கேட்க பல உயர் தர ஆடியோ ஃபார்மேட்கள், பல உயர் தர ஹெட்போன்கள் நாளுக்கு நாள் அதி நவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகிக் கொண்ட இருக்கின்றன. இசையை துல்லியமாகக் கேட்பவர்கள் அதிக விலையில் உயர் தர ஹெட்போன்களை நோக்கிச் செல்கின்றன.
முதன்முதலில் ஹெட்போனை மாட்டி, அதில் நீங்கள் கேட்ட முதல் பாடலின் அனுபவம் நினைவிருகிறதா? அது என்ன பாடல், அதன் அனுபவம் குறித்து கமெண்டில் சொல்லுங்கள்.