• July 4, 2025
  • NewsEditor
  • 0

தாயத்தில் வீசும் புயல்!

நீண்டகாலமாக சைலன்ட் மோடிலிருந்த தாயகத்தில் சமீபகாலமாக புயல் வீசத்தொடங்கியிருக்கிறது. ம.தி.மு.க முதன்மைச் துரை வைகோவுக்கும், துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா இடையிலான ‘ஈகோ’ மோதல் பெரும் சர்ச்சையாக வெடித்தது. நீண்ட பேசுவரத்தைக்கு பிறகு ஒருவழியாக இருவரையும் சமாதானம் செய்துவைத்தார், வைகோ. இந்தசூழலில்தான் தி.மு.க கூட்டணியில் ராஜ்யசபா எம்.பி-யாக பதவி வகித்துவந்த வைகோவின் பதவிக்காலம் 24-7-2025 தேதியுடன் முடிவடைகிறது. மீண்டும் தனக்கு ராஜ்யசபா சீட் பெறுவதற்காகப் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டார், வைகோ.

ம.தி.மு.க.

ஆனால், கூட்டணியில் புதிதாக இணைந்த ம.நீ.ம கட்சிக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுவிட்டதால், ‘ம.தி.மு.க-வுக்கு இல்லை’ என கையைவிரித்துவிட்டது தி.மு.க தலைமை. இதையடுத்து வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க-வினர் அப்செட்டாகினர். இதில் துரை வைகோ வெளிப்படையாகவே தனது வருத்தத்தைத் தெரிவித்திருந்தார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில், ‘தி.மு.க கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப்பெறுவோம்’ என்றும் தொடர்ந்து அக்கட்சித் தலைவர்கள் பேசிவருகின்றனர்.

“ராமன் வனவாசம் சென்றதால்தான் பரதனுக்கு பட்டாபிஷேகமே நடந்தது!”

இந்த நிலையில், 22.6.2025 அன்று ஈரோட்டில் நடைபெற்ற ம.தி.மு.க-வின் 31-வது பொதுக்குழுக் கூட்டத்தில், தி.மு.க மீதான வருத்தத்தை வெளிப்படையாகப் போட்டுடைத்தனர், ம.தி.மு.க நிர்வாகிகள். இது தி.மு.க தலைமையை எரிச்சலுக்குள்ளாக்கவே, பிரச்னை வேறு ரூபத்தில் வெடிக்கத் தொடங்கியது. ம.தி.மு.க-வில் வைகோவுக்கு நெருக்கமாக இருந்துவந்த முத்துரத்தினத்தை தி.மு.க-வில் இணைத்து, ம.தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

மதிமுக கூட்டம்

இதன் பின்னணி குறித்துப் பேசுவோர், “ஈரோடு பொதுக்குழுவில் பேசிய ம.தி.மு.க அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ், ‘ராமாயணத்தில் ராமன் வனவாசம் சென்றதால்தான் பரதனுக்கு பட்டாபிஷேகமே நடந்தது’ என்று பேசியிருந்தார். இது, தி.மு.க-விலிருந்து வைகோ வெளியேறியதனாலேயே இன்றைக்கு மு.க.ஸ்டாலினால் முதல்வராக முடிந்திருக்கிறது என்பதை மறைமுக விமர்சனம் செய்வதாக இருந்தது. மேலும், தொடர்ந்து அவமதிக்கப்பட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறி மாற்றுக்கூட்டணி அமைக்கவும் தயங்கமாட்டோம் என்ற அர்த்தத்தில் அவர் பேச மேடையில் அமர்ந்திருந்த வைகோவின் முகத்தில் ‘ஈ’ ஆடவில்லை.

கடுப்பான முதல்வர்.. கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்!

பிறகு மைக் பிடித்த பொருளாளர் செந்திலதிபனோ, வைகோ அதிர்ச்சியிலேயே உறைந்து போகச் செய்துவிட்டார். “‘40 எம்.பி-க்களில் துரை வைகோவுக்கு சமமாக யாரவது இருக்கிறார்களா?’ என நேரடியாகவே தி.மு.க-வையும், கூட்டணிக் கட்சிகளையும் வம்புக்கிழுத்தார், அவர். இதில் கடுப்பாகிப்போன வைகோ, ‘மைக் கிடைச்சுட்டா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா?’ என மேடையிலேயே இருவரையும் கடிந்துகொண்டார். ஆனாலும் ம.தி.மு.க-வின் பொதுக்குழு பேச்சுகள் அறிவாலயத் தரப்பை சூடேற்றிவிட்டது” என்கின்றனர்.

மதிமுக கூட்டம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அறிவாலய சீனியர்கள், “ம.தி.மு.க தலைமை மீது அதிருப்தியிலிருக்கும் பலரும், ஏற்கெனவே தி.மு.க-வில் இணைய முயன்றனர். ஆனால், கூட்டணிக்கட்சி என்பதால் முதல்வர் ஸ்டாலின் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்தச்சூழலில்தான் அந்தக் கட்சியின் பொதுக்குழுவில் தி.மு.க-வை தாக்கிப் பேசியது முதல்வரை கடுப்பாக்கிவிட்டது. இதையடுத்து ம.தி.மு.க அதிருப்தியாளர்களை தி.மு.க-வில் இணைக்க ‘ஓகே’ சொல்லிவிட்டார். பிறகுதான் முத்துரத்தினம் உள்ளிட்ட ம.தி.மு.க-வினர் தி.மு.க-வில் இணைக்கப்பட்டனர்.

ம.தி.மு.க-வினர் கேட்பதுபோல கூடுதல் தொகுதிகளைக் கொடுக்க தளபதி தயாராக இல்லை. எனவே, வேறு சில கட்சிகளையும் உள்ளே கொண்டுவருவதற்கான அசைன்மென்ட் இரண்டு சீனியர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.

முத்துரத்தினம் வரிசையில் மல்லை சத்யா?

இதற்கிடையே முத்துரத்தினம் தி.மு.க-வுக்கு சென்றதற்குப் பின்னால் வேறு ஒரு கணக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள், திருப்பூர் ம.தி.மு.க-வினர். “வைகோவுக்கு மிகவும் நெருக்கமானவராக ஒருகாலத்தில் முத்துரத்தினம் இருந்தார். இது துரை வைகோவுக்குப் பிடிக்கவில்லை. அதேநேரம் முத்துரத்தினத்துக்கும் முன்னாள் அவைத்தலைவர் துரைசாமிக்கும் இடையிலிருந்த நட்பு வைகோவுக்கும் உறுத்தலாகவே இருந்தது. இதனால் தந்தையும், மகனும் சேர்ந்து முத்துரத்தினத்தை ஓரம் கட்டிவிட்டனர்.

துரை வைகோ - மல்லை சத்யா
துரை வைகோ – மல்லை சத்யா

இதில் அப்செட்டான முத்துரத்தினம், தி.மு.க-வுக்குத் தாவிவிட்டார். இதேபோல், கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யாவும் அண்மைக்காலமாக வருத்தத்தில்தான் இருக்கிறார். நடந்துமுடிந்த பொதுக்குழுக் கூட்டத்திலும் அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை. வரும் தேர்தலிலும் அவருக்கு சீட் கொடுக்க துரை வைகோ தயாராக இல்லை என்கிறார்கள். இதனால் அவர் உள்ளிட்ட மேலும் சிலரும் தி.மு.க-வுக்குச் செல்லத் தயாராக உள்ளனர்” என்று அதிர்ச்சி கொடுத்தனர்.

“I am very sorry about you!”

நிலைமை மிகவும் மோசமாக செல்வதை உணர்ந்துகொண்ட ம.தி.மு.க தலைமை, 29-6-2025 அன்று அவசர அவசரமாக நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்டியது. இதில் தி.மு.க-வை சமாதானப்படுத்தும் விதமாக, ‘தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியிலேயே தொடருவோம்’ என முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “ ‘தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் வேண்டும் என்றால், 8 சட்டமன்ற உறுப்பினர்களாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

மதிமுக கூட்டம்

அதை நினைத்து 12 தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்கலாம்’ எனத் துரை வைகோ தெரிவித்தார். தி.மு.க-விடம் 12 தொகுதி கேட்போம் என யாரும் யோசிக்கவும் இல்லை.. கேட்கவும் இல்லை. ஓர் உதாரணத்துக்குத்தான் துரை வைகோ 12 தொகுதிகள் கேட்போம் எனச் சொன்னார். இரட்டை இலக்கத் தொகுதிகள் கேட்போம் என நான் பேசவே இல்லை என்று சொன்னபிறகும் நீங்கள் ஏன் அப்படி ஒரு கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள்? I am very sorry about you” எனக் கொதித்தார்.

‘இயக்கத் தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும்’

தொடர்ந்து பேசிய துரை வைகோ, “எங்களுக்குக் குறைந்தபட்ச அங்கீகாரம் தேவைன்னு நினைக்கிறோம். அதற்குத்தான் 12 தொகுதிகளில் போட்டி போடணும். ஆனால், இதில் முடிவு எடுக்க வேண்டியது எங்களது இயக்கத் தலைமை என்றுதான் கூறினேன்” என்றார். இப்படி தந்தையும், மகனும் அடுத்தடுத்து சமாதானப்புறாவைப் பறக்கவிட்டிருக்கிறார்கள். ஆனாலும் தி.மு.க-வின் கோபம் குறைந்ததாக தெரியவில்லை. இதையடுத்து சென்​னை, தேனாம்​பேட்​டை​யில் உள்ள தி.மு.க தலை​மையகத்​தில் முதல்​வரும் கட்​சித் தலை​வரு​மான மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார், வைகோ.

துரை வைகோ
துரை வைகோ

அதன் பின்னணி குறித்துப் பேசும் ம.தி.மு.க சீனியர்கள், “தலைவர் வைகோவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை என்கிற வருத்தத்தில் கட்சியில் சிலர் பேசினர். அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. அதை எதிர்க்கட்சிகள் பெரிதாக பேசி வருகின்றன. நீங்கள் கொடுத்த வாய்ப்பினால்தான் நான் எம்.பியாக இருந்தேன். ம.தி.மு.க தொடர்ந்து தி.மு.க கூட்டணியில்தான் தொடரும். தி.மு.க அரசுக்கு எதி​ராக எந்த பிரச்​சினை​யிலும் ஒரு வார்த்தை கூட நான் விமர்​சன​மாக வைத்​த​தில்​லை, வைக்​க​வும் மாட்​டேன்.” என சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

“தி.மு.க-வை விமர்சனம் செய்ய மாட்டேன்”

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய வைகோ, “முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை மரி​யாதை நிமித்​த​மாகத்​தான் சந்​தித்​தேன். ம.தி​.மு.க-​வில் நடை​பெற்று வரும் செயல் வீரர்​கள் கூட்​டம் தொடர்​பாக அவரிடம் தெரி​வித்​தேன். தி.மு.க அரசுக்கு எதி​ராக எந்த பிரச்​சினை​யிலும் ஒரு வார்த்தை கூட நான் விமர்​சன​மாக வைத்​த​தில்​லை, வைக்​க​வும் மாட்​டேன். தி.மு.க-​வுக்​குப் பக்​கபல​மாக இருப்​பேன் என முன்​னாள் முதல்​வர் கருணாநி​தியிடம் தெரிவித்தேன். அதை நேற்று முன்​தினம் கூட மேடை​யில் பேசி​யிருந்​தேன் என முதல்​வரிடம் தெரி​வித்​தேன்.

வைகோ – முதல்வர் ஸ்டாலின்

இந்​துத்​துவ சனாதன சக்​தி​கள், திரா​விட கொள்​கைகளைத் தகர்க்​கலாம் என நினைத்​தால், இமயமலை​யைக் கூட அசைக்​கலாம் திரா​விட இயக்​கத்தை ஒன்​றும் செய்ய முடி​யாது. வாஜ்​பாய், அத்​வானி ஆகியோர் என்னை மத்​திய அமைச்​ச​ராக்​கு​கிறோம் என்று சொன்​ன​போது நான் முடி​யாது என்று சொன்​னேன். என்னை பொறுத்​த வரை கொள்கை என்​றால் அதில் உறு​தி​யாக இருப்​பேன். வரும் தேர்​தலில் திமுக தனிப்​பெரும்​பான்​மை​யாக வென்று ஆட்​சி​யைப் பிடிக்​கும். கூட்​டணி ஆட்சி என்​பது எங்​களின் நோக்​கம் அல்ல. அதை தமிழக மக்களும் ஏற்​றுக்​கொள்ள மாட்டார்கள். எங்​களின் கூட்​டணி மாபெரும் வெற்​றி பெறும்”​ என்றார். இப்படியாக தந்தையும், மகனும் சமாதானப்புறாவை பறக்கவிட்டிருக்கிறார்கள். ஆனால் தி.மு.க என்ன செய்யப்போகிறது என்பது போகபோகத்தான் தெரியும்!

வைகோவுக்கு பதவி ஆசை இல்லை!

பொதுக்குழுப் பேச்சு குறித்து ம.தி.மு.க-வின் அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ்-ஜிடம் விளக்கம் கேட்டபோது, “தசரதன் இறந்த பிறகு ராமர் காட்டுக்குச் சென்றதால் பரதனுக்கு ஆட்சி கிடைத்தது. ஆனால், அப்போதும் பரதன், ‘ஆட்சி வேண்டாம்’ என்றார். அதேபோல்தான் பலதருணங்களில், தனக்குப் பதவி வாய்ப்புகள் வந்தபோதும் ‘வேண்டாம்’ என்று தவிர்த்துவந்தார் வைகோ. எனவே வைகோவுக்கு பதவி ஆசை இல்லை’ என்றுதான் பேசினேன். மற்றபடி ஸ்டாலின் குறித்து நான் அங்கு எதுவும் பேசவில்லை. சிலர் கற்பனையாக செய்திகளை வெளியிடுகின்றன.

வைகோவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை என்கிற வருத்தம் இருக்கிறது. அந்த வருத்தத்தை நான் வெளிப்படுத்தியது அவரின் மனதை புண்படுத்திவிட்டது. எனவேதான் ‘இப்படிப் பேசுவது தெரிந்திருந்தால், பேசவே அனுமதித்திருக்க மாட்டேன்’ என கடிந்துகொண்டார்” என்றார் வருத்தமாக.

மதிமுக கூட்டம்

தொடர்ந்து ம.தி.மு.க பொருளாளர் செந்திலதிபனிடம் அவரது பேச்சுக்கு விளக்கம் கேட்டபோது, “39 எம்.பி-க்களைவிட துரை வைகோ தனது தொகுதியில் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறார் என்றுதான் அன்றைக்குப் பேசினேன். மற்றபடி யாரையும் நான் விமர்சிக்கவில்லை” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *