
பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம், ‘ராமாயணா – தி இன்ட்ரோடக்ஷன்’ என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டிருப்பதாக அப்போதே அறிவித்திருந்தனர். முதல் பாகத்தை 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போதும், இரண்டாம் பாகத்தை 2027-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போதும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்திற்கு ஹாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மருடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மானும் இசையமைத்திருக்கிறார். நடிகர் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், நடிகர் யஷ் ராவணன் கதாபாத்திரத்திலும், நடிகை சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும், நடிகர் ரவி தூபே லட்சுமணன் கதாபாத்திரத்திலும், சன்னி தியோல் ஹனுமான் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் திரைக்கதைப் பணிகளைத் திரைக்கதையாசிரியர் ஶ்ரீதர் ராகவன் மேற்கொண்டிருக்கிறார். 8 ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கும் ‘DNEG’ என்ற கிராபிக்ஸ் நிறுவனமே இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் படத்தின் முதல்வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

அந்த வீடியோவை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நடிகை சாய்பல்லவி, “அம்மா சீதாவின் ஆசிர்வாதத்துடன், ராமயணக் காவியத்தை மீண்டும் உருவாக்கும் பணியில், தெய்வீகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து, அந்தப் பயணத்தை அனுபவிக்கிறேன்!. இது போன்ற ஒரு நடிகர்கள் மற்றும் குழுவினருடன், நாம் அடைய முயற்சிக்கும் அற்புதத்தை நீங்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்தப் பதிவு வைரலாகியிருகிறது.