
சிலருக்கு நாக்கின் மீது மாவு போன்ற வெண்படலம், புள்ளிகள் ஏற்படுகின்றன. இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல், தினமும் காலை பல் தேய்த்து முடித்தவுடன், டங் கிளீனரைக்கொண்டு அழுத்தித் தேய்ப்பார்கள். இதனால், நாக்கில் காயங்கள் ஏற்பட்டு, வலி, எரிச்சல், வீக்கத்தால் நாள் முழுதும் அவதிப்படுவார்கள். நாக்கில் வெண்புள்ளிகள், வெண்படலம் போன்றவை ஏன் ஏற்படுகின்றன, இவற்றுக்குச் சிகிச்சைகள் என்னென்ன என்று பல் மற்றும் முகச் சீரமைப்பு மருத்துவர் சுரேஷ் அவர்களிடம் கேட்டோம்.
டெப்ரிஸ் (Debris) என்னும் பாக்டீரியா மற்றும் நாக்கில் உள்ள இறந்த செல்களால் ஏற்படுவது, இந்த வகை வெண்படலம். டெப்ரிஸ் ஒரு சாதாரண பாக்டீரியா. பல் தேய்க்கும்போது, நாக்கை பிரஷ்ஷின் பின்புறம் உள்ள சொரசொரப்பான பகுதியைக்கொண்டு நன்கு சுத்தம் செய்தாலே, இந்த பாக்டீரியா நீங்கிவிடும்.
கேண்டிடா அல்பிகன்ஸ் (Candida albicans) என்னும் பூஞ்சைத் தொற்றால் நாக்கின் மேல் இந்த வெண்புள்ளிகள் ஏற்படுகின்றன. 15 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக ஏற்படும்.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், இதய அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், நரம்பு தொடர்பான நோய்கள் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த வெண்புள்ளிகள் வரும்.
காய்கறிகள், அத்தி, பேரீச்சம் உள்ளிட்ட பழங்கள், நட்ஸ், கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும். ஏதேனும் நோய்களால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டவர்கள், சிகிச்சை எடுத்துக்கொண்டு அந்த நோயைக் கட்டுப்படுத்தினாலே வெண்புள்ளிகள் மறைந்துவிடும்.
சளியால் ஏற்படும் பிரச்னை காரணமாக வாயில் உள்ள சவ்வு படலத்தில் (ம்யூக்கஸ்) வீக்கம் ஏற்படும். இதன் காரணமாக ஓரல் லைடிகன் ப்ளேனஸ் ஏற்படுகிறது. உள்ளங்கை, கன்னத்தின் உட்பகுதி, மேல் அன்னம், நாக்கு ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். அரிப்பு, வலி, வீக்கமும் ஏற்படும். மிக அரிதாக, வாய்ப்புற்றுநோயாக மாறக்கூடும்.
காரணம்
அதீத மனஅழுத்தம், பல்வேறு நோய்களுக்கு அதிகமாக மாத்திரைகள், வலிநிவாரணிகள் சாப்பிடுவதால் ஏற்படலாம்.
காரமான மசாலா உணவுகளை சாப்பிடுதல், மதுப்பழக்கம் காரணமாக இப்படி வரலாம்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, தேவைப்பட்டால் நாக்கில் இருந்து மிகச் சிறிய அளவு சதை அகற்றப்பட்டு, பயாப்ஸி பரிசோதனை செய்யப்படும்.
சிகிச்சை
பல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதனைக் குணப்படுத்த கிரீம்கள் வழங்கப் படுகின்றன.
புகை, மது, காரமான உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதே இதற்கான இயற்கையான நிவாரணம்.
பல்செட் கட்டி இருப்பவர்களுக்கு, அவை தாடையில் சரியாகப் பொருந்தாவிட்டால், அது வாயில் உள்ள ம்யூக்கஸ் படலத்தை பாதிக்கும். இதனால், லியுகோபிளாக்கியா ஏற்படும்.
ஒழுங்கற்ற கூர்மையான பற்கள், ம்யூக்கஸ் படலத்தைப் பாதிப்பதால் லியுகோபிளாக்கியா ஏற்படும். இவை தவிர, புகைப்பழக்கம், வாய்ப்புற்றுநோய் உள்ளவர்களுக்கு, ஓர் அறிகுறியாக இந்தப் பிரச்னை ஏற்படும்.
ஒழுங்கற்ற பற்கள் அறுவைசிகிச்சை மூலமாகச் சீரமைப்பது, புகைப்பழக்கத்தைக் கைவிடுவது இதற்குத் தீர்வு.