
ராயசோட்டி: தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளாவில் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் கடந்த 1995 ம் ஆண்டு முதல் பல்வேறு நாச வேலையில் ஈடுபட்டனர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், ராயசோட்டியில் துணி வியாபாரம் செய்து, தலைமறைவாக வாழ்ந்தனர். இந்த இரு தீவிரவாதிகளை தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவினர், கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர். மேலும், அபுபக்கரின் மனைவி ஷேக் சைராபானு, முகமது அலியின் மனைவி ஷேக் ஷமீம் ஆகியோரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், ஆந்திர போலீஸார் இவர்களது வீட்டில் சோதனை நடத்தியபோது, பக்கெட் வெடிகுண்டுகள், பார்சல் வெடிகுண்டுகள், கன் பவுடர் மற்றும் 2 நகரங்களின் வரைபடங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்நிலையில், சென்னையில் இருந்து திரும்பிய 2 தீவிரவாதிகளின் மனைவிகளை ராயசோட்டி போலீஸார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இவர்கள் இருவரையும் 14 நாட்கள் வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.