• July 4, 2025
  • NewsEditor
  • 0

இந்தியா, டிஜிட்டல் மயமாக்கலில் மிக வேகமாக முன்னேறிவருகிறது. ஆனால், தனிநபர்களின் தரவுகளைப் பாதுகாத்தல், தரவுகளைச் சரிபார்த்தல், போலி தரவுகளை அடையாளம் கண்டு நீக்குதல் போன்றவற்றில் இன்னமும் பின்தங்கியே இருக்கிறது என்பது வேதனையே! இதனால், பல்வேறு பிரச்னைகளை மக்கள் சந்திக்கின்றனர். குறிப்பாக, கடன் விஷயத்தில் பிரச்னைகளுக்கு அளவே இல்லை.

சம்பந்தப்பட்டவருக்குத் தெரியாமலேயே அவர் பெயரில் கடனுக்கு விண்ணப் பிக்கப்படுவது, கடனைக் கட்டி முடித்த பிறகும் கடன் முடிக்கப்படாமல் இருப்பது, கிரெடிட் வரலாறுகளில் குளறுபடிகள், கிரெடிட் ஸ்கோர் பாதிப்புகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். இதனால், தகுதியானவர்களுக்குக் கடன் கிடைப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. கடன் வாங்காதவர்கள், தங்கள் பெயரில் கடன் இருப்பதாகக் காட்டுவதால் மனஉளைச்சலுக்கு ஆளாவது தனிக்கதை.

இது போன்ற குளறுபடிகளால், தனிநபர்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசாங்கம், நிதித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களும்கூட பாதிப்புக்குள்ளாகின்றன. சரியான தரவுகளை ஒருங்கிணைக்கும் பணி மிகவும் சிக்கலானதாகவும், அதிக செலவுள்ளதாகவும் இருப்பதுதான் இதற்கெல்லாம் முக்கிய காரணம். இதுதொடர்பாகத் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டாலும் அசையாமலே இருந்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தற்போது, மெள்ள அசைய ஆரம்பித்துள்ளன.

இதற்காக, ULI என்ற யுனிஃபைட் லெண்டிங் இன்டர்ஃபேஸ், கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இது, நிதித் துறையில் உள்ள தரவுகள் சார்ந்த குளறுபடிகளைச் சரிசெய்து, நிதிச் சேவைகளை எளிமையாகவும், விரை வாகவும் மற்றும் பிழைகள் அற்றதாகவும் மேம்படுத்த உதவும். UPI-க்கு அடுத்து ULI இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு பயணத்தில் அடுத்த புரட்சியாக இருக்கும். பணப் பரிவர்த்தனையில் UPI செய்த புரட்சியைப் போல, கடன் வழங்கும், வசூலிக்கும் செயல்பாடுகளில் ULI புரட்சியை உண்டாக்கும்’ என்று அப்போது பெருமையோடு குறிப்பிட்டார், அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்.

அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆன நிலையில், மெள்ள சோம்பல் முறித்து, ‘கடன்தாரர்களுக்கென தனித்துவமான அடையாளம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதன் மூலம், சரியான தரவுகளை நிதி நிறுவனங்கள் பெற முடியும். போலி கணக்குகள், தவறான விவரங்கள் மற்றும் கிரெடிட் ஸ்கோர் பாதிப்புகள் உள்ளிட்ட குளறுபடிகளைத் தவிர்க்கவும் முடியும்’ என்று இப்போது கூறியுள்ளது ரிசர்வ் வங்கி.

உண்மைதான். ஆனால், இது போன்ற விஷயங்களில் உடனடியாகச் செயல்பட்டு, விரைவாக நடைமுறைப்படுத்தினால்தானே தனிநபர்கள், நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கித் துறை என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதை உணர்ந்து, இப்போதாவது இந்தப் பணிகளை ரிசர்வ் வங்கி விரைவுபடுத்தி முடிக்கும் என்று நம்புவோம்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *