
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13, 14-ல் மட்டும் நாடாளுமன்றத்தில் பணிகள் நடைபெறாது என்று நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
கூட்டத்தொடரை ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் முடிக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 21 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த நீண்ட கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு, முதல்முறையாக நாடாளுமன்றம் கூடுவதால், அந்த நடவடிக்கை குறித்தும், இந்தியா – பாகிஸ்தான் போர்நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தலையீடு குறித்தும் விவாதம் நடைபெறும் என தெரிகிறது. கூட்டத்தொடர் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.