• July 3, 2025
  • NewsEditor
  • 0

கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், உயிரிழந்தவர்களில் பாதிபேர் 20 முதல் 40 வயதுடையவர்கள்.

கொரோனா காலத்தில் போட்டுக்கொண்ட தடுப்பூசி தான் மாரடைப்பு ஏற்பட்டு இவர்கள் உயிரிழக்க காரணம் என்று பரவிய பேச்சு இந்த விவாதத்தை பெரும் விவாதமாக்கியது.

சித்தராமையா

அதோடு மாநில முதலமைச்சர் சித்தராமையா, “கொரோனா காலத்தில் தடுப்பூசிகளை அவர அவசரமாக அங்கீகரித்து, அவற்றைப் பொதுமக்களுக்கு விநியோகித்தது இந்த இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என்பதை யாரும் மறுக்க முடியாது” என ஒரே நேரத்தில் மத்திய அரசையும், தடுப்பூசி நிறுவனங்களையும் விமர்சித்தார்.

முதலமைச்சரின் இத்தகைய கருத்து இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக்கியது. கூடவே, இதில் ஒரு மருத்துவர் குழுவையும் அமைத்து இறப்புக்கான காரணங்கள் கண்டறிந்து 10 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் சித்தராமையா உத்தரவிட்டார்.

இருப்பினும் மத்திய அரசு, சித்தராமையாவின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தது.

அந்த வரிசையில், இந்த திடீர் உயிரிழப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு எதுவும் இல்லை என கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா இன்று கூறியிருக்கிறது.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையைப் பகிர்ந்திருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம், “சுகாதார அமைச்சகத்தால் மேற்கோள் காட்டப்பட்டபடி, ICMR மற்றும் AIIMS-ன் இரண்டு பெரிய அளவிலான ஆய்வுகள், கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் இந்தத் திடீர் இறப்புகளுக்கும் இடையே எந்த தொடர்பையும் கண்டறியவில்லை.

தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்டவை” என்று பதிவிட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *