
ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’.
இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. சிறப்புக் காட்சியில் படம் பார்த்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கலகலப்பாக பதிலளித்தார் இயக்குநர் ராம்.
குழந்தைகள் பேசுவது சென்சாரில் பிரச்னையாகிடும்…
பறந்து போவில் 8 வயது குழந்தை கெட்ட வார்த்தை பேசும் காட்சிக்கு, “இன்னைக்கு 9 வயசு பசங்க பேசுறத படத்தில் வைத்தால் சென்சாரில் பிரச்னையாகிவிடும். இந்த ஜெனரேஷன் குழந்தைங்க நம்ம கற்பனைக்கு அப்பாற்பட்டு பேசுறாங்க” என பதிலளித்தார்.
“விபத்துகள் விதி விலக்குகள்தான்” – பாஸிட்டிவ் பதில்!
“சிவா முகத்தில் எப்போ ஜோக் அடிக்கிறார், எப்போ சீரியஸாக பேசுகிறார் என கண்டுபிடிக்கவே முடியாது. சுலபமாக ஏமாற்றிவிடுவார்… இந்த படத்தில் நடித்ததால் அவருக்கு உடம்பு குறைந்திருக்கிறது. அதற்கு அவர் எனக்கு தனியாக பணம் தர வேண்டும்” என நகைச்சுவையாக பதிலளித்தார் ராம்.

படத்தில் நெகட்டிவ் கேரக்டரே இல்லையே, அந்த பையன் ஓடும்போது யாரும் கடத்திட்டு போயிருவாங்களோன்னு தோன்றியது… எனக் கேட்டபோது, “நிஜ வாழ்க்கையில் காணாமல் போகும் குழந்தைகள் திரும்ப வந்துவிடுகிறார்களே. இப்போதெல்லாம் நாம் மொபைலில் ஒரு சிசிடிவி காட்சியைப் பார்த்தாலே அதில் விபத்து ஏற்படும் என நினைக்கிறோம். சாதாரணமானவற்றைப் பொருட்படுத்துவதே இல்லை. பெரும்பாலும் இங்கு நெகடிவ்வாக நடப்பது இல்லை, விபத்துகள் விதி விலக்குகள்தான்” என்றார்.
ஊர்வசி மேடம் மாதிரி ஒரு கதாநாயகி!
வசனம் மற்றும் பாடல்களில் இருந்த ஆங்கில கலப்பு குறித்த கேள்விக்கு, “இன்றைய 8 வயது குழந்தையின் மனதில் ஆங்கில வார்த்தைகள் இருப்பதனால் படத்தில் ஆங்கிலம் அதிகம் இருக்கிறது. தமிழ் பிறமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்ளக் கூடிய மொழிதான். ஆங்கிலமே சுத்தமான மொழி இல்லை. நாம் சொல்லும் கட்டுமரம்தான் அங்கே Catamaran. மாங்கா தான் mango.” என பதிலளித்தார் ராம்.

மேலும், “முருகரா (கடவுள்) இருந்தாலும் சரி, அன்புவா (படத்தில் வரும் கதாப்பாத்திரம்) இருந்தாலும் குழந்தைகளுக்கு மலையேறுவதில் எப்போதும் விருப்பம் இருக்கும். இந்த படத்தில் “இவனுக்கு அன்புன்னு பெயர் வச்சதுக்கு ஆறுமுகம்னு வச்சிருக்கலாம், மலையைப் பார்த்தாலே ஏறிடுறான்” என ஒரு வசனம் இருந்தது. அதைத் தூக்கிவிட்டோம்.” என்றார்.
கதாநாயகி கிரேஸ் ஆண்டனி குறித்து, “எனக்கு ஊர்வசி மேடம் ரொம்ப பிடிக்கும். மகளிர் மட்டும்ல இருந்து பல படங்களில் அவங்களை ரசிச்சிருக்கோம். எனக்கு சின்ன வயசு ஊர்வசி மேடம் தேவைப்பட்டாங்க. இவங்களை அப்பன்னு ஒரு படத்தில் பார்க்கும்போது இவங்களோட நகைச்சுவை, மேனரிசம் எல்லாமும் புதுசா ஒரு ஊர்வசி மேடம் கிடச்ச மாதிரி இருந்தது.”
மிடில்கிளாஸ் பெற்றோர்தான் போராளிகள்!
“மிடில் கிளாஸ் பெற்றோர் மாதிரி உழைக்கக் கூடியவங்க யாரும் இல்லை… ஒரு இரவில் இவ்வளவு கடன், வாடகை எப்படி கொடுக்கப் போறோம், இன்னைக்கு யார் அவமானப்படுத்தி பேசியது, ஸ்கூல்ல பசங்களைப் பற்றி என்ன சொன்னாங்க, டியூசன் சேர்க்கலாமா வேண்டாமா போன்ற விஷயங்களைத்தான் பேசுகிறார்கள்… அவர்கள்தான் நிஜ போராளிகள். இந்த படம் சொல்லவருவது என்னவென்றால் உங்களுக்கு இருக்கும் எல்லா பிரச்னைகளுக்கும் நடுவில் வாழ்க்கையை கொண்டாடுங்கள். அதைத்தான் அந்த பையன் அவங்க அப்பா அம்மாவுக்கு உணர்த்துறான். படத்தின் கதை நகரத்தில் இருந்து கிராமத்துக்கு போங்க என சொல்வது இல்லை.” என்றார்.