• July 3, 2025
  • NewsEditor
  • 0

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின், சேவாக் ஓப்பனர்களுக்குப் பிறகு உருவான மிகச்சிறப்பான ஓப்பனர்கள் ரோஹித், தவான்.

2013 சாம்பியன்ஸ் டிராபியில் கவனம் ஈர்த்த இந்த ஓப்பனிங் ஜோடி சுமார் ஏழெட்டு வருடம் இந்திய அணிக்கு வலுவான ஓப்பனிங்கை அமைத்தது.

இதில், ரோஹித் சர்மா இன்றும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிக்கொண்டிருக்கிறார்.

ஷிகர் தவான்

ஆனால், 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் காயம் காரணமாகப் பாதியிலேயே தொடரிலிருந்து வெளியேறிய தவான் மெல்ல மெல்ல அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

ஃபார்மில் இருந்தும் சில ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காததால் ஒருகட்டத்தில் அவராகவே (2024 ஆகஸ்ட்) தனது ஓய்வை அறிவித்தார்.

சரியாகச் சொன்னால் 2021 டி20 உலகக் கோப்பைக்கு முன்பே டி20 கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓரங்கட்டப்பட்டார்.

2022 டிசம்பருக்குப் பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் முழுமையாக ஓரங்கட்டப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2018-ல்தான் கடைசியாக விளையாடியிருந்தார்.

இவ்வாறாக, அவர் ஓய்வு அறிவிப்பதற்கு முன்பாகவே அவரின் சர்வதேச கிரிக்கெட் கரியர் முடிந்துவிட்டது என்றே கூறலாம்.

இந்த நிலையில், தன்னுடைய கரியர் முடிந்துவிட்டது என எப்போது தன் மனதில் தோன்றியது என்பதை தவான் பகிர்ந்திருக்கிறார்.

ஷிகர் தவான்
ஷிகர் தவான்

இந்திய அணியில் தனது கரியரின் இறுதிக்கட்டம் குறித்து ஹிந்துஸ்தான் ஊடகத்திடம் பேசிய தவான், “2021 டி20 உலகக் கோப்பைக்கான அணியில் என் பெயர் வராது என்று எனக்கு தெரியும்.

அணி வீரர்கள் பட்டியல் வெளியான பிறகு என் பெயர் ஏன் இல்லை என்று யாரிடமும் நான் கேட்கவில்லை.

நான் கேட்டிருந்தாலும் அவர்களுக்கு ஒரு பார்வை இருந்திருக்கும். நானும் என் பக்கத்தைக் கூறியிருப்பேன். ஆனால், அதனால் எந்த மாற்றமும் வந்திருக்காது.

நான் நிறைய அரைசதங்கள் அடித்திருக்கிறேன். சதங்கள் பெரிதாக அடித்ததில்லை, ஆனால் 70+ ரன்கள் நிறைய அடித்திருக்கிறேன்.

இஷான் கிஷன் அன்று இரட்டைச் சதம் அடித்தபோது, “உன் கரியரின் எண்ட் இதுவாக இருக்கலாம்” என்று என் உள்ளுணர்வு என்னிடம் கூறியது. பின்னர் அதுதான் நடந்தது.

எனது நண்பர்கள் ஆறுதல் கூறினார்கள். நான் உடைந்துபோய்விடுவேன் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், நான் நன்றாகத்தான் இருந்தேன்.” என்று கூறினார்.

ஷிகர் தவான் - டிராவிட்
ஷிகர் தவான் – டிராவிட்

அந்த சமயத்தில் அணி வீரர்கள் யாராவது தங்களைத் தொடர்புகொண்டார்களா என்ற கேள்விக்கு, “இல்லை, அது அப்படி நடக்காது.

டிராவிட்டிடம் (அப்போதைய பயிற்சியாளர்) நான் பேசியிருக்கலாம். அவர் எனக்கு மெசஜ் செய்திருந்தார்.

மற்றபடி, வீரர்களுக்கு அவரவர் பயணம் உண்டு. எனவே இது சாதாரணமான ஒன்று.

அணியிலிருந்து நான் கழற்றிவிடப்படுவதும் அல்லது சேர்க்கப்படுவதும் என இதுவொன்றும் எனக்கு முதல்முறை நடப்பது அல்ல.

14 வயதிலிருந்தே நாங்கள் அதற்குப் பழகிவிட்டோம்.” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *