
திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்வைத்து மதுரையில் அண்மையில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி அதிரவைத்தது இந்து முன்னணி. மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது இந்து முன்னணி தான் என்றாலும் மாநாட்டின் பலனை தங்களுக்கானதாக அறுவடை செய்து கொண்டது பாஜக.
மாநாட்டை நடத்துவதற்கு காவல் துறை தரப்பில் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்ட நிலையில், அதையெல்லாம் நீதிமன்றம் வரைக்கும் சென்று தளர்த்தி மாநாட்டை நடத்தி முடித்தார்கள். இந்த நிலையில், முருகபக்தர்கள் மாநாடு கூட்டப்பட்ட அதே அம்மா திடலில் 6-ம் தேதி, மனிதநேய மக்கள் கட்சி (தமுமுக அரசியல் பிரிவு) மாநில மாநாட்டை நடத்துவதும் விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்து முன்னணி மாநாட்டுக்குப் போட்டியாக இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் என ஒரு தரப்பினரும், முஸ்லிம்களின் பலத்தைக் காட்டி அதற்கேற்ப கூட்டணியில் சீட் பேரம் பேசுவதற்காகத்தான் இந்த மாநாடு என ஒரு தரப்பினரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.