
‘கால்பந்து வீரர் மரணம்!’
போர்ச்சுக்கலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் டியோகோ யோடா கார் விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.
போர்ச்சுக்கலை சேர்ந்த 28 வயதான டியோகா யோடா ப்ரீமியர் லீகில் லிவர்பூல் அணிக்காக ஆடி வருகிறார். கடந்த 2022 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் டியோகா போர்ச்சுக்கல் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென ஏற்பட்ட காயத்தால் அவரால் உலகக்கோப்பையில் ஆட முடியாமல் போனது. டியோகாவுக்கு கடந்த ஜூன் 22 ஆம் தேதிதான் அவரின் நீண்ட கால தோழியுடன் திருமணம் நடந்திருந்தது.
‘ரொனால்டோ உருக்கம்!’
இந்நிலையில், டியோகோவும் அவரின் சகோதரர் ஆண்ட்ரே சில்வாவும் ஸ்பெயினில் காரில் சென்று கொண்டிருந்த போது கார் டயர் வெடித்ததில் தீப்பிடித்து இறந்திருக்கின்றனர். இந்தச் செய்தி கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

‘இது எப்படி நடந்ததென்றே புரியவில்லை. நாங்கள் வெகு சமீபத்தில்தான் போர்ச்சுக்கல் அணிக்காக இணைந்து ஆடியிருந்தோம். உனக்கு இப்போதுதானே திருமணமும் முடிந்திருந்தது. உன்னுடைய குடும்பத்துக்கும் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்கள் மனவலிமையோடு இருக்க வேண்டும். எனக்கு தெரியும், நீ எப்போதும் அவர்களுடன்தான் இருப்பாய். டியோகோ மற்றும் ஆண்ட்ரே இருவரும் என்றும் எங்களின் நினைவில் நிற்பார்கள்.’ என ரொனால்டோ உருக்கமாக தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.