
கடலூர் மாவட்டம், நெய்வேலி இந்திரா நகர் பி-2 மாற்றுக் குடியிருப்பைச் சேர்ந்த 62 வயது கொளஞ்சியப்பன், என்.எல்.சி-யில் ஊழியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திரா நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம், திருமண உறவை தாண்டிய நட்பாக மாறியது. அதையடுத்து தனிமையில் சந்தித்துக் கொண்ட இருவரும், வெளியூர்களுக்கும் சென்று தங்கி வந்தனர்.
ஒருகட்டத்தில் இவர்களின் காதல் விவகாரம், கொளஞ்சியப்பனின் மனைவி பத்மாவதிக்கு தெரியவந்தது. அதையடுத்து காதலியுடனான நட்பை கைவிடுமாறு கூறினார் பத்மாவதி. ஆனால் கொளஞ்சியப்பன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்படி சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், `இப்படியே பேசிக்கிட்டு இருந்தால், வீட்டை காதலிக்கு எழுதிக் கொடுத்துவிடுவேன். என் காதலிக்குத்தான் என் வீடு’ என்று பத்மாவதியை மிரட்டியிருக்கிறார் கொளஞ்சியப்பன்.
அதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்திருக்கிறார் பத்மாவதி. இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கியிருக்கிறார் கொளஞ்சியப்பன். அப்போது திடீரென கண் விழித்த பத்மாவதி கடப்பாரையை எடுத்து வந்து, தூங்கிக் கொண்டிருந்த கொளஞ்சியப்பனின் தலையில் குத்தினார்.
அதனால் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார் கொளஞ்சியப்பன். இரவு முழுவதும் அவரது சடலத்துடன் அமர்ந்திருந்த பத்மாவதி, விடிந்ததும் தன்னுடைய உறவினர்களுக்குப் போன் செய்து கொளஞ்சியப்பனை கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார்.

அதையடுத்து கொளஞ்சியப்பனின் சடலத்தை மீட்ட போலீஸார் பத்மாவதியை கைது செய்தனர். அதையடுத்து, `எனக்கு துரோகம் பண்ணதும் இல்லாம, அப்படித்தான் செய்வேன் என்று திமிராக பேசியது எனக்கு கோவம் வந்துடுச்சி. இனிமேல் இவர் உயிரோட இருக்கக் கூடாதுனுடான் கொலை பண்ணிட்டேன்’ என்று போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் பத்மாவதி.