
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டி, “விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள் ஆனால், அரசோ அலட்சியமாக இருக்கிறது” என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலத்தில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை மாநில சட்டப்பேரவையில் அரசு தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று தலையங்கம் வெளியிட்டது. இதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “யோசித்துப் பாருங்கள்… வெறும் 3 மாதங்களில், மகாராஷ்டிராவில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது வெறும் புள்ளிவிவரமா? நிச்சயமாக இல்லை. உண்மை என்னவென்றால், 767 குடும்பங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அந்த 767 குடும்பங்களால் இனி ஒருபோதும் மீள முடியாது. ஆனால், அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. அது அலட்சியமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.