• July 3, 2025
  • NewsEditor
  • 0

ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்யப்படுவது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இம்மோசடி மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.க்களையும் பாதிக்க ஆரம்பித்து இருக்கிறது. மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்கள், சட்டமேலவை உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இதில் சட்டமேலவை உறுப்பினர்கள் எந்த தொகுதிக்கு வேண்டுமானாலும் செலவு செய்ய முடியும். ரத்னகிரி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பீட் மாவட்ட ஆட்சித்தலைவரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அக்கடிதத்தில் சட்டமேலவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3.2 கோடி பீட் மாவட்டத்திற்கு ஒதுக்கும்படியும், அந்த நிதியில் 36 திட்டங்களை செயல்படுத்தும்படி பா.ஜ.க சட்டமேலவை உறுப்பினர் பிரசாத் லாட் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பி இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதோடு ரத்னகிரி மாவட்ட ஆட்சி தலைவருக்கு பிரசாத் லாட் போன் செய்தும் இது தொடர்பாக பேசினார்.

ஆனால் அக்கடிதம் மற்றும் போனில் சந்தேகம் அடைந்த ரத்னகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் இது குறித்து பிரசாத் லாட்டிற்கு போன் செய்து தனது சந்தேகத்தை கேட்டார். அப்போதுதான் அது போன்ற ஒரு கடிதம் தனது பெயரில் சென்று இருப்பது பிரசாத் லாட்டிற்கு தெரிய வந்தது. பிரசாத் லாட், தான் யாருக்கும் அது போன்று கடிதம் கொடுக்கவில்லை என்றும், போனில் பேசவில்லை என்றும் தெரிவித்தார். விசாரணையில் பிரசாத் லாட் பெயரில் வந்திருந்த பரிந்துரை கடிதம் போலி என்று தெரிய வந்தது. அதோடு யாரோ மர்ம நபர் ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பிரசாத் லாட் பெயரில் மாவட்ட திட்ட அதிகாரிக்கு போன் செய்து ஒரு குறிப்பிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இப்பிரச்னையை பிரசாத் லாட் சட்டமேலவையில் எழுப்பினார். அவர், `எனக்கு தெரியாமல் எனது போலி லட்டர் பேடு மற்றும் என்னைப் போன்று பேசி எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து லாத்தூர் மாவட்டத்திற்கு ரூ.3.2 கோடி டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நிதி ஒதுக்கீட்டில் இருக்கும் குளறுபடிகள் சரி செய்யப்பட வேண்டும்’ ‘என்றார். சட்டமேலவை தலைவர் ராம் ஷிண்டேயும், இது போன்ற சம்பவங்களால் மற்ற எம்.எல்.ஏக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இரண்டு சட்டமேலவை உறுப்பினர்கள் இது தொடர்பாக புகார் செய்துள்ளனர். இது போன்ற மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *