
தமிழ் மக்களின் கருணை, தமிழர் அறம், தமிழ் மண்ணின் வீரம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த அடையாளம் பாரி மன்னன். ஆனந்த விகடனில் சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களுடன் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ தொடராக வந்தபோது லட்சக்கணக்கான வாசகர்கள் பிரமிப்பு குறையாத மனதுடன் அதை வாசித்தார்கள்.
ஒரு ரயில் பயணத்தில் ஏற்படும் சினேகம், அந்தப் பயணம் முடிந்து நம் இடம் வந்து சேர்ந்ததும் முடிந்துவிடும். ஆனால், ‘வேள்பாரி’யுடன் தமிழ் மக்கள் நிகழ்த்திய பயணம் அப்படிப்பட்டதில்லை. பாரி தொடங்கி அந்த வரலாற்றின் அத்தனை பாத்திரங்களையும் தங்கள் நெஞ்சில் சுமந்தார்கள். அதனால்தான் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ புத்தக வடிவம் பெற்று இன்று ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாறு படைத்திருக்கிறது.
‘வேள்பாரி’ இன்னொரு வகையிலும் தமிழ் மக்கள் மத்தியில் பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நாவலைப் படித்துவிட்டு, இதில் வரும் கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டு, தங்கள் குழந்தைகளுக்கு அந்தப் பெயர்களைச் சூட்டினார்கள் பல பெற்றோர்கள்.
வேள்பாரி, ஆதினி, நீலன், ஆதன், அகுதை, அங்கவை, சங்கவை, இளமருதன், உதியஞ்சேரல், உதிரன், எவ்வி, கிள்ளி, செம்பாதேவி, பதுமன், பொற்சுவை, மதங்கன் என்று பல குழந்தைகள் தமிழ்க் குடும்பங்களில் பெருமிதமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மண்ணில் இப்படி ‘வேள்பாரி’யின் தாக்கத்தில் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டியவர்கள் 5,000 பேருக்கு மேல் இருப்பார்கள். நவீன தமிழ் இலக்கியத்தில் வேறு எந்தப் படைப்புக்கும் கிடைக்காத தனிப்பெருமை இது.
‘வீரயுக நாயகன் வேள்பாரி’ ஒரு லட்சம் பிரதிகள் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்ததை விகடன் பிரசுரம் வெற்றி விழாவாகக் கொண்டாடுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்பட இயக்குநர் ஷங்கர், தமிழ்நாடு அரசு நிதித்துறை செயலாளர் த. உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., திரைக்கலைஞர் ரோகிணி ஆகியோருடன் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைப் படைத்த சு.வெங்கடேசன் பங்கேற்கும் இந்த விழா ஜூலை 11, 2025 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
வேள்பாரியால் ஈர்க்கப்பட்டு தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டியவர்களை இந்த விழாவில் பங்கேற்க குடும்பத்துடன் அழைக்கிறோம். எமது நடுவர் குழுவால் தேர்வு செய்யப்படும் 25 குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் மேடையேறும் வாய்ப்பைப் பெறலாம்.
விழாவுக்கு வர விரும்புவோர் கீழ்க்கண்ட லிங்க்கில் பதிவு செய்யவும்:
Click here: https://forms.gle/fJ1FumUehDXLZdoFA