• July 3, 2025
  • NewsEditor
  • 0

நிலம் அல்லது வீடு வாங்குவதில் மிக மிக முக்கியம், ‘பத்திரப் பதிவு’.

‘நிலம், வீடு எந்த மதிப்பில் பதிவு செய்ய வேண்டும்?’, ‘முத்திரைக் கட்டணம் எவ்வளவு?’, ‘பதிவுக் கட்டணம் எவ்வளவு?’ என்று ஏகப்பட்ட கேள்விகள் நம்மிடையே இருக்கும்.

அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் வழக்கறிஞர் முத்துசாமி.

சென்னையைச் சேர்ந்த பில்டர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி

நிலம் எந்த மதிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும்?

முதலில், நிலத்தின் அரசு நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பை தெரிந்துகொள்ளுங்கள். நிலம் அமைந்திருக்கும் இடம், சாலை மற்றும் சர்வே எண்ணைப் பொறுத்து, அரசாங்கம் அதற்குக் கொடுத்திருக்கும் மதிப்பே, வழிகாட்டி மதிப்பு ஆகும்.

இந்த மதிப்பில் 7 சதவிகிதத்தை முத்திரைக் கட்டணமாக கட்ட வேண்டும்; 2 சதவிகிதத்தைப் பதிவுக் கட்டணமாக கட்ட வேண்டும்.

உதாரணத்திற்கு, வழிகாட்டி மதிப்பின் படி, நிலத்தின் விலை ரூ.10 லட்சம் என்று எடுத்துக்கொள்வோம். அப்போது, முத்திரைக் கட்டணமாக ரூ.70,000 + பதிவுக் கட்டணமாக ரூ.20,000 என மொத்தம் ரூ.90,000 பத்திரப் பதிவிற்காக அரசுக்கு செலுத்த வேண்டும்.

கட்டடத்தோடு இருக்கும் நிலத்தை எப்படி பதிவு செய்ய வேண்டும்?

அரசு நிர்ணயித்த கட்டட மதிப்பு மற்றும் நில வழிகாட்டி மதிப்பில் 7 சதவிகித தொகையை முத்திரைக் கட்டணமாகவும், 2 சதவிகித தொகையை பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

அப்பார்ட்மென்ட்
அப்பார்ட்மென்ட்

ஃபிளாட், அப்பார்ட்மென்ட், வில்லாகளுக்கு என்ன நடைமுறை?

இவைகளை புதிதாக முதல் விற்பனை (first sale) பதிவு செய்ய, இந்த இடத்திற்கு அரசு நிர்ணயித்த நிலம் மற்றும் கட்டிடத்தின் கூட்டு மதிப்பை (composite value) கீழ்வரும் முறையில் செலுத்த வேண்டும்.

ரூ.50 லட்சத்திற்குக் குறைவாக உள்ள இந்தக் கட்டடங்களுக்கு…

முத்திரைக் கட்டணம்: 2.86 சதவிகிதம்

டிரான்ஸ்ஃபர் கட்டணம்: 1.144 சதவிகிதம்

பதிவுக் கட்டணம்: 2 சதவிகிதம்

மொத்தம்: 6 சதவிகிதம்

ரூ.50 லட்சம் டு ரூ.3 கோடி கட்டடங்களுக்கு…

முத்திரைக் கட்டணம்: 3.575 சதவிகிதம்

டிரான்ஸ்ஃபர் கட்டணம்: 1.43 சதவிகிதம்

பதிவுக் கட்டணம்: 2 சதவிகிதம்

மொத்தம்: 7 சதவிகிதம்

ரூ.3 கோடிக்கும் அதிகமான கட்டடங்களுக்கு…

முத்திரைக் கட்டணம்: 5 சதவிகிதம்

டிரான்ஸ்ஃபர் கட்டணம்: 2 சதவிகிதம்

பதிவுக் கட்டணம்: 2 சதவிகிதம்

மொத்தம்: 9 சதவிகிதம்

அப்பார்ட்மென்ட்
அப்பார்ட்மென்ட்

செக்கண்ட் ஹேண்ட் / முன்பே பதிவு செய்த பயன்படுத்திய ஃபிளாட், அப்பார்ட்மென்ட் மறு விற்பனை (Second/Subsequent sales) பதிவு செய்ய கீழ்வரும் நடைமுறையைக் கடைபிடிக்கவும்.

வாங்கும் நிலத்தின் அரசு வழிகாட்டி மதிப்பு மற்றும் அன்றைய கட்டடத்தின் அரசு பொதுப்பணித்துறை நிர்ணயித்த மதிப்பில் 7 சதவிகிதம் முத்திரைக் கட்டணம் மற்றும் 2 சதவிகித பதிவுக் கட்டணம் கட்ட வேண்டும். மொத்தம் 9 சதவிகிதம் (இணைப்பு- A படி) ஆகும்.

கட்டடத்தின் மதிப்பு என்பது எதனைப் பொறுத்தது?

என்ன மாதிரியான கட்டடம், எங்கு அமைந்துள்ளது, கட்டடத்தின் வயது மற்றும் தரம், சாலை, அளவு, பயன்படுத்திய மெட்டிரியல்கள்,மரங்கள், தளம், கூரை, மின் இணைப்பு உபகரணங்கள், கழிவறை மற்றும் குளியலறை உபகரணங்கள் , தண்ணீர் வழங்கல், குளிர் சாதனங்கள், மோட்டர், கதவு, கழிவறை வசதி, ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளி கிணறு, குழாய்கள், நீர் மற்றும் கழிவுத் தொட்டிகள், மின் தூக்கி(லிப்ட்), காம்பவுண்ட் சுவர் இதர உள்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்து, அரசு பொது பணித் துறையின் (PWD) வழிகாட்டுதலின் படி, கட்டட மதிப்பு நிர்ணயிக்கப்படும்.

பெண்களுக்கான சலுகை என்ன?

நிலம், வீடு, பிளாட், அப்பார்ட்மென்ட் என எதுவாக இருந்தாலும், சமீபத்திய அரசு அறிவிப்பின் படி, பத்திரப் பதிவுக் கட்டணத்தில் பெண்களுக்கு 1 சதவிகிதம் தள்ளுபடி இருக்கிறது. இந்தத் தள்ளுபடி ரூ.10 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம், வீடு, பிளாட், அப்பார்ட்மென்ட் போன்றவைகளுக்கு, சில நிபந்தனைகளுடன் பொருந்தும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *