
சிவகங்கை மடப்புரத்தில் போலீஸாரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் வழக்கில் சக்தீஸ்வரன் என்பவர் முக்கிய சாட்சியாக மாறியிருக்கிறார். அஜித் குமாரை காவலர்கள் தாக்கும் சம்பவத்தை சக்தீஸ்வரன் வீடியோ எடுத்திருந்தார். அந்த வீடியோதான் நீதிமன்றத்திலும் சாட்சியாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சக்தீஸ்வரன் தனக்கும் இன்னும் சாட்சியாக மாறவிருப்பர்களுக்கும் பாதுகாப்பு வேண்டி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இது சம்பந்தமாக பத்திரிகையாளர்களையும் சந்தித்திருந்தார்.
சக்தீஸ்வரன் பேசியதாவது, ”நீதிபதியே எனக்கு பாதுகாப்பு கொடுக்க சொன்னாரு. ஆனா, யாரும் கொடுக்கல. என் உயிர் போனாலும் பிரச்னை இல்லை. ஆனா, என்னையை பார்த்து நிறைய பேர் சாட்சி சொல்ல வந்தாங்க. அவங்க இப்போ பின் வாங்குற மாதிரி தெரியுது.

குற்றத்தில் சம்பந்தப்பட்ட எல்லோர் மீதும் நடவடிக்கை எடுங்கள். அஜித் இறந்த சம்பவத்திலிருந்தே எங்களால் மீண்டு வர முடியவில்லை. எனவே மேலும் அழுத்தம் ஏற்றாதீர்கள். எங்களுக்குப் பாதுகாப்பு கொடுங்கள். நாங்கள்தான் அஜித்தை அடித்து காவல்துறையில் ஒப்படைத்தோம் எனத் தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு தூக்கமே வரவில்லை. அஜித்தைக் காப்பாற்ற முடியவில்லையே என்கிற வருத்தம் இன்னமும் இருக்கிறது. அஜித் குமாரைத் தாக்கிய போது மிளகாய் பொடியை யார் வாங்கி வரச் சொன்னது, யார் வாங்கி வந்தது என எல்லாவற்றையும் விசாரணையின் போது சொல்லியிருக்கிறேன்.’ என்றார்.