
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
ரஜினியின் 50 ஆண்டுகால சினிமா பயணத்தைக் கொண்டாடும் வகையில் இந்தத் தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
படத்தின் புரோமோஷன் பணிகளும் கூடிய விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சிக்கிடு’ பாடல் கடந்த வாரம் வெளியாகியிருந்தது.
டி. ராஜேந்திரனின் மெட்டு ஒன்றை வைத்து இந்தப் பாடலை கம்போஸ் செய்திருக்கிறார் அனிருத். ரஜினி இந்தப் பாடலுக்கு கொடுத்த பாராட்டு பற்றி அனிருத் பேசியிருக்கிறார்.
அனிருத், “படப்பிடிப்பிற்கு முன்பு பாடல்களைக் கேட்கும் பழக்கம் ரஜினி சாருக்கு கிடையாது. ஆனால், ‘ஹுக்கும்’ பாடலை நான் படப்பிடிப்பிற்கு சில நாட்களுக்கு முன்பே அவருக்கு அனுப்பிவிட்டேன்.
‘கூலி’ படத்தின் இந்த ‘சிக்கிடு’ பாடலை படப்பிடிப்பில் தான் கேட்டார். அவர் இந்தப் பாடலுக்கு நடனமாடியதை வைத்தே அவருக்குப் பாடல் எந்தளவிற்கு பிடித்திருக்கிறது என்பதை உணர முடியும்.
இந்தப் பாடலின் முதல் நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு அவருக்கு பாடல் மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னார். இந்தப் பாடலுக்கு நடனமாடுவது அவருக்கு கடினமானதாக இருக்கப்போகிறது எனவும் கூறியிருந்தார்.

இந்தப் பாடலுக்கு அவருடைய ஸ்டைல் நடனத்தைக் கொண்டு வந்தார். சிறப்பான நடனத்தைக் கொடுத்திருந்தார். அவருக்கே பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. மக்கள் இந்தப் பாடலை திரையரங்குகளில் எப்படி வரவேற்பார்கள் என்பதைக் காணவும் ஆவலாக இருக்கிறேன்.
என்னுடன் பணிபுரியும் கார்திக் வம்சி என்பவர்தான் டி. ராஜேந்திரன் சாரின் வைரலான வீடியோவை எனக்கு டியூன் ஐடியாவாக அனுப்பினார். நான் அதை அடிப்படையாகே வைத்தே ஒரு முழுப் பாடலை தயார் செய்யத் தொடங்கினேன்.
இயக்குநர் லோகேஷும் டி. ஆர். சாரின் மிகப்பெரிய ரசிகர். லோகேஷுக்கும் இந்தப் பாடல் பிடித்திருந்தது.
ரஜினி சார் 70-களில், 80-களில் ஆடிய அதே நடன ஸ்டைலை மீண்டும் இந்தப் பாடலுக்காக கோரியோகிராஃபர் சாண்டி கொண்டு வந்திருக்கிறார்.” எனப் பகிர்ந்திருக்கிறார்.