
சென்னை: விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி போலீஸாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான போலீஸாரின் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவவிட்டுள்ளார். இதுதொடர்பாக மண்டல ஐஜிக்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் துணை ஆணையர்கள். போலீஸ் எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோரின்கீழ் செயல்படும் சிறப்பு (தனிப்படை) படைகள் நிரந்தரமாக செயல்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.