
நீலகிரி மாவட்ட ஆட்சியராக லக்ஷ்மி பவ்யா தன்னீரு பதவி வகித்து வருகிறார். முந்தைய ஆட்சியர்கள் பயன்படுத்தி வந்த அரசின் சி.யூ.ஜி கைப்பேசி எண்ணினை அரசு அலுவலுக்காக இவரும் பயன்படுத்தி வருகிறார். ஆட்சியராக கையெழுத்திட்டு பொறுப்பேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வாட்ஸ் – அப் முகப்பு படமாக ( whatsapp dp) பயன்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், அதே புகைப்படத்தை முகப்பாகக் கொண்ட ஒரு எண்ணில் இருந்து முக்கிய நபர்கள் பலருக்கும் வாட்ஸ் – அப் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. ‘ வணக்கம் நான் தான் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு. அவசர தேவைகளுக்காக என்னுடைய வங்கிக் கணக்கை பயன்படுத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட தொகையை செலுத்தி உதவுங்கள். அந்த பணத்தை பின்னர் உங்களுக்கு திருப்பி தருகிறேன்’ என ஆங்கிலத்தில் அதில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. சந்தேகமடைந்த சிலர் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர், இந்த மோசடி குறித்து உடனடியாக சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்திருக்கிறார் . ‘என்னுடைய பெயரை பயன்படுத்தி வரும் போலி மெசேஜ்களை நம்பி யாரும் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு ஏமாற வேண்டாம்’ என எச்சரித்து வருகிறார்.