
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் பிறந்த எட்வர்ட் எஸ்ட்லின் கம்மிங்ஸ் – E.E. கம்மிங்ஸ், அதுவரை இருந்த இலக்கண விதிமுறைகள் தொடர்பிலான கேள்விகளை எழுப்பிய கவிஞர்.
வழக்கமாக எழுதக் கூடிய தொடர்களில் நிறுத்தற்குறிகளைப் புறக்கணிப்பதும், இடைவெளிகளை ஆராய்வதுமான சமகால டிஜிட்டல் உலகத்திற்கும் வளர்ந்துவரும் ஹேஷ்டேக்- கலாச்சார எழுத்துமுறைக்கும் அன்றே வித்திட்டிருக்கிறார்.
அவர், நிறுத்தற்குறிகளைப் புறக்கணித்து அடைப்புக் குறிக்குள் கவிதைகளைக் கணித சூத்திர முறையில் எழுத முனைந்தவர். அவருடைய மொழிநடை அன்றைய கட்டுப்பாடுகளை உடைத்து Capital/Small Letters-க்கான எல்லைகளை மீறியிருக்கிறது.
இன்றைய நவீனத் தகவல் தொடர்புகளால் வடிவமும், மொழியும் நீர்த்துப் போகும் தன்மையை அன்றே உணர்ந்திருக்கிறார்.
l(a…( a leaf falls on loneliness)
le
af
fa
ll
s)
one
lines
முதலில் இந்தக் கவிதையை எப்படி வாசிப்பதெனச் சற்றுத் திகைத்தேன். மேலிருந்து கீழாக, எழுத்துக்களைப் பிரித்தும், அடைப்புக்குறியிட்டும் நகர்த்திச் சென்றிருக்கிறார்.
ஓர் இலை தனிமையின் மீழ் சரிந்து விழுவதை எழுத்துகளை உடைத்ததன் வழியாகக் காட்சியாகவே மாற்றியிருக்கிறார். சாதாரணமாக ஓர் இலை விழுவது ஒரு கலைப்படைப்பாகிவிட்டது.
மரம், இலையை வேறு வழியின்றி உதிர்த்துவிடுகிறது. தவிர்க்க முடியாத பலநேரங்களில் தனித்துவிடப்படும் சூழலைப் பேசுகிறது. ஆனால் இக்கவிதை நடையின் கணிதச் சூத்திரம், Leaf – Loneliness என்பதற்கு ஒரே L போட்டு மற்ற எழுத்துகளை அடைப்புக் குறிக்குள் காட்டுகிறார்.
சொற்பமான சொற்களுடன் மனித உணர்வுகளோடு, இயற்கையின் நகர்வையும் பேசுகிறது. சிறு கவிதையாக இருந்தாலும், மறக்காமல் எண்ணிக்கொண்டிருக்கக்கூடிய, நிலையான கவிதையாகத் திகழ்கிறது.
இதேமாதிரியான வடிவத்தைத் தமிழ்க் கவிதைகளில் அடைப்புக் குறிக்குள் போட்டு மரபார்ந்த வடிவத்திலும், சித்திரக் கவிதைகளும் எழுதியிருக்கின்றனர். சிங்கப்பூரின் கவிஞர் இக்குவனம், சித்திரக் கவிதைகள் எழுதியதில் முதன்மையானவர். வெவ்வேறு வடிவில் இலக்கண உத்திகளைப் பரிசோதித்திருக்கிறார்.
கீழேயுள்ள கவிதை பிரான்சிஸ் கிருபாவினுடையது,
ஓட்டை அலைபேசியில்
பதியும் புதிய எண்கள்
பதிந்த கணமே
ஒ
வ்
வொ
ன்
றா
ய்
ஒழுகிப்போய்விடுகின்றன
‘ஒழுகாத அலைபேசி’ என்ற கவிதையில் அலைபேசி எண்கள் ஒழுகிப் போய்விடுகின்றன, ஒன்றன் பின் ஒன்றாக எண்கள் சென்றுவிடுகின்றன என்கிறார்.
எனக்கு யாருமில்லை
நான்
கூட
இந்தக் கவிதையின் வரியை ‘நான், கூட’ இரண்டையும் சேர்த்து ஒரே வரியில் சொல்வதை விட அடுத்த வரிக்கு நகர்த்தும்போது கவிதைக்கு இன்னொரு பரிமாணம், ஒவ்வொரு வரிக்கும் அர்த்தமிருப்பதுபோல் எழுதுவதுதான் அதனுடைய வரியமைப்பு என்று சொல்லும் நகுலன் இந்தக் கவிதையில் ஒரு சொல்லை நிற்க வைத்திருக்கின்றார்.
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்
ற
ன!
இப்படியான வடிவங்களை உபயோகிக்கும் உத்திகள், காட்சிகளுடன் உணர்வுகளையும் கடத்துகின்றன. கவிதையின் மையத்தை மிக நேர்த்தியுடன் எழுத்துகள் நகர்த்திக் கொண்டு செல்கின்றன.
i carry your heart with me (i carry it in
my heart)
i fear
no fate(for you are my fate,my sweet)
கம்மிங்ஸ் இதுபோன்று பெரும்பான்மையான கவிதைகளில் பெரிய எழுத்துகளைத் தவிர்த்து எல்லாவற்றையும் சிறிய எழுத்துகளிலேயே எழுதியிருக்கிறார்.
படிக்கின்ற காலத்திலேயே வழக்கத்திற்கு மாறான நிறுத்தல் குறிகள், வாக்கியத் தொடர்களில் இதுபோன்ற பரிசோதனைகள் செய்து பார்த்திருக்கிறார்.
இன்று எமோஜிகள் கொஞ்சம் கொஞ்சமாக மொழியில் இலகுத் தன்மையைக் கொண்டு வந்து மொழியைத் தின்றுகொண்டிருக்கின்றன. நிறங்களின் வழியாகக் குறிப்புணர்த்தி வந்தோம். இப்போதெல்லாம் உணர்வுகளை மொழியின் வழியாகச் சொல்ல வேண்டியதில்லை.
சொற்களைச் சுருக்கி நுணுக்கி எழுதியது போக, அதையும் நிராகரித்துவிட்டு ஏதேனுமொரு எமோஜியின் வழியாக உணர்வுகளை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டோம்.
மொழியினை மெல்லச் சாகடிக்க இதுவுமொரு ஆயுதமாகிவிட்டது. மொழியின் வளர்ச்சிக்கு இப்படியான குறியீட்டு முறைகள் பெரும் சவாலே. அதிலும் சில மகிழ்ச்சிகரமான, கலகலப்பான கருத்துப்பரிமாற்றம் உள்ளதென்றாலும் கவிதையை மீம் போல் பார்க்கும் பார்வைகள் இணையக் கலாச்சாரத்திலும், இலக்கிய உலகிலும் நிலைபெறுகின்றன.
கம்மிங்ஸின் ஆரம்பகால வாழ்க்கை, கேம்பிரிட்ஜ் லத்தீன் உயர்நிலைப் பள்ளியில் கழிந்தது. லத்தீன் மற்றும் கிரேக்கம் பயின்றார். ஹார்வர்ட் பல்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஹார்வர்ட் பேராசிரியரான அவரது தந்தை கவிதைகள் எழுதுவதை ஊக்குவித்தார். அப்போதுதான் எஸ்ரா பவுண்ட்டின் கவிதைகள் அவருக்கு அறிமுகமாகின.
அவரது கலைப் பார்வையைத் துலக்கமாக வடிவமைத்து, நவீனத்துவக் கருத்துகள் மற்றும் புதுமையான நுட்பங்களுக்கு அவரை எஸ்ரா பவுண்டின் எழுத்துகள்தான் தள்ளின.

முதலாம் உலகப் போரின்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலைக்குச் செல்வது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இவரும் அந்தப் பணியில் சேர்ந்தார். இந்த அனுபவம் அவரது உலகக் கண்ணோட்டத்தையும் கலை வெளிப்பாட்டையும் ஆழமாகப் பாதித்தது. போர்க்காலச் சேவையில் பிரான்சில் சிறைத் தண்டனை அனுபவத்தையும் பெற்றிருக்கிறார்.
ஆம்புலன்ஸ் படையில் பணியாற்றிய காலத்தில் தனது வீட்டிற்குக் கடிதங்களை அனுப்பினார். சக வாகன ஓட்டுநர்களை விடப் பிரெஞ்சு வீரர்களின் துணை நன்றாக இருப்பதாக எழுதியதைப் படித்த ராணுவத்தினருக்கு ஆத்திரம் அதிகமாகியது.
ஜெர்மானியர்கள் மீது தனக்கு வெறுப்பு இல்லை என்று பேசினார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு, உளவு பார்த்தல் மற்றும் விரும்பத்தகாத செயல்கள் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு ராணுவத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டார். அவர்கள் மற்ற கைதிகளுடன் ஒரு பெரிய அறையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கம்மிங்ஸின் தந்தை தனது மகனை விடுதலை செய்யக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனாலும் தாமதாகிக்கொண்டேயிருக்க அப்போதைய ஜனாதிபதி உட்ரோ வில்சனுக்கு ஒரு கடிதம் எழுதினார். பிறகு விடுவிக்கப்பட்ட கம்மிங்ஸ், 1918 ஆம் ஆண்டுப் புத்தாண்டு அன்று அமெரிக்காவில் உள்ள தனது குடும்பத்தினரிடம் திரும்பினார்.
இந்தக் காலகட்ட சிறைவாசம் என்பது தனக்கான சுயபரிசோதனை என்று சொல்கிறார். தனிநபர் சுதந்திரம், நவீன சமூகத்தின் உள்ளார்ந்த ஒடுக்குமுறை அம்சங்கள் தொடர்பான ஆழ்ந்த பரிசீலனையைத் தனது சொந்த அனுபவத்திலிருந்து எழுதிய முதல் நாவல் The Enormous Room.
அமெரிக்கா திரும்பியபின், ஓவியம் வரைவதில் கம்மிங்ஸ் கவனம் செலுத்தினார். அவரது தந்தை ரிச்சர்ட், தனது மனைவியுடன் வெளியில் சென்று கொண்டிருந்தபோது காரின் முன் கண்ணாடியில் விழுந்த பனிப்பொழிவைத் துடைப்பதற்காக இறங்கினார்கள்.
பனிப்பொழிவில் ரயில் தண்டவாளத்துக்கு நடுவில் கார் நிறுத்தப்பட்டதை உணர்வதற்குள் அந்த வழியாக வந்த ரயில் காரில் சேதத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதில் காருக்குள் இருந்த தந்தையார் ரிச்சர் இறந்துபோக, தாயார் மட்டும் தப்பித்தார்.
கம்மிங்ஸ் ராணுவத்தை விட்டு வெளியேறிய பின்னர், தனது நண்பர் ஸ்கோஃபீல்டின் மனைவி எலைனுடன் முன்பிருந்த உறவைப் புதுப்பித்தார். அவர்களுக்கு ஒரு மகள் பிறந்து இரண்டே மாதங்களில் பிரிவு ஏற்பட்டு விவாகரத்தும் நடந்தது. மரியன் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்த வாழ்வில் பிடிப்புடன் இருந்தார்.
அப்போது மீண்டும் கம்மிங்ஸ் எலைனைச் சந்தித்தார். அவருக்கும் எலைனுக்கும் பிறந்த மகள் நான்ஸி கம்மிங்ஸை தந்தையென்று அறியாமல் பேசிப் பழகத் தொடங்கினார். நான்சியின் கணவருக்குத் தொழிலில் நட்டம் ஏற்படவே இன்னும் நெருங்கிப் பழக ஆரம்பித்து இலக்கியம் முதல் உலக நடப்புகள் வரை எல்லாவற்றையும் மனம்விட்டுப் பேசுகிறார்கள்.
ஒருகட்டத்தில் அவரையே விரும்பத் தொடங்குகிறாள். அதைக் கம்மிங்ஸிடம் சொல்லும்போது, நான் உனது தந்தையென யாரும் சொல்லவில்லையா எனக் கேட்க நான்சி உடைந்துபோய், அவரை விட்டு பிரிந்தார்.
கம்மிங்ஸின் இறுதிச் சடங்கிற்குக் கூட வராமல், நான்ஸி தனது இரண்டு மகள்களை மட்டும் அனுப்பி வைத்திருக்கிறார்.

கம்மிங்ஸ் முக்கியமான கவிஞராக அறியப்பட்டு அவருடைய கவிதைகளை Eight Harvard Poets என்ற தலைப்பில், எட்டு கவிஞர்களின் தொகுப்புகள் வெளியாகிறது. இந்நூல் அந்த நூற்றாண்டில் வெளியான சிறந்த செவ்வியில் இலக்கியமாகப் பார்க்கப்பட்டது.
இதன் மறுபதிப்பு வெளிவராமல் இருந்த நிலையில் இப்போது மீண்டும் வெளியிட்டுள்ளனர். 1952 ஆம் ஆண்டு, அவரது பழைய கல்விக்கூடமான ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கௌரவ விருந்தினர் பேராசிரியர் பதவியை வழங்கியது.
கம்மிங்ஸின் இந்தக் கவிதையில் காதலும் இரவும் சேர்ந்து மலர்ந்திருக்கிறது. இதிலும் கவிதை மரபுகளை உடைக்கிறார். மென்மையான சமூகத்தின் மாயைகளை உடைத்திருக்கிறார்.
இரவு
சூரியன் மறைந்த இரவு
நிலவினடியில் சிவந்த மேகம்
இங்குத் தான் எனது காதலியைச்
சப்தமின்றி நிற்கும்
மரங்களுக்குப் பின் சந்திப்பேன்.
வெள்ளிப் புல்வெளிக்கிடையே
பூக்கள் மடிந்த புல்லின் மேல்
நடந்து வருகிறாள்
அவளது பாதங்கள் நிலவொளியின்
அம்புகள் போன்றவை
மாயமான காடுகளில்,
நிழல் நிரம்பிய நிசப்தத்தில்,
அவளது முகத்தில்
நட்சத்திரம் மின்னுகிறது
வெண்மையான நீரலைகள் அமைதியாகச் சுழல்கின்றன
நான் அவளது கைகளைப் பார்க்கலாமா
இருளை அல்லிகளால் சூடாக்குவதைப்போல்.
உயிர் இப்போது அமைதியாக இருக்கிறது
இப்போது தான் காதல் மெல்ல மலர்கிறது
இரவு;
நிலவின் கீழ் சிவந்த மேகமாய்!
இன்னொரு சுவாரசியமான கவிதை, “எல்லாம் கிடைத்த ஆன்மாவுடன் வாழும் கேம்பிரிட்ஜ் பெண்கள்”.
இது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதிய கவிதை. அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள மாசசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரம் கேம்பிரிட்ஜ். இங்குள்ள ஹார்வர்ட் மற்றும் எம்ஐடி ஆகிய இரண்டு உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், இந்த நகரத்துக்குப் பெருமை சேர்க்கின்றன.
இக்கவிதை கேம்பிரிட்ஜ் பகுதியில் வசிக்கக்கூடிய இரண்டு உயர் வர்க்கப் பெண்களைப் பற்றிய முரண்பாடான சித்தரிப்பு. கடுமையான நவீனத்துவக் குரலுடன், கம்மிங்ஸ் மேல்தட்டு வர்க்கத்தின் போலியான, மேலோட்டமான கரிசனத்தையும், சலுகையையும் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்புகிறார். ‘எல்லாமும் கிடைத்த ஆன்மா’ என்ற உருவகப்படுத்தி முதல் வரியே கொந்தளிக்கிறது.
பெண்கள் குருட்டுத்தனமாக மதத்தையும், வழிபாடுகளையும் நம்பி, அற்பமான உரையாடல்கள் வழியாகக் கீழ்த்தட்டு மக்களின் துயரங்களை விமர்சிக்கிறார். கிண்டலுக்கும் அவமதிப்புக்குமிடையே ஊசலாடும் தொனியிலிருக்கும் “எல்லாம் கிடைத்த ஆன்மாவுடன் வாழும் கேம்பிரிட்ஜ் பெண்கள்” கவிதை.
எல்லாம் கிடைத்த ஆன்மாவுடன் வாழும் கேம்பிரிட்ஜ் பெண்கள்
அழகற்றவர்கள்தான், ஆனால் மனம் சௌகரியமானது
(மேலும், புராட்டஸ்டன்ட் திருச்சபை ஆசிர்வதித்த
குமாரத்திகள் எந்த நறுமணமோ உருவமோ இல்லாத ஆவிகள்)
கிறிஸ்துவையும் லாங்ஃபெல்லோவையுமே நம்புகிறார்கள்,
இருவருமே இறந்துபோனவர்கள்.
எதையுமே விட்டுவைக்காமல்
எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பவர்கள்
சமகால எழுத்துகளைக் கண்டுகொள்ளாமல்
மகிழ்ச்சியான விரல்கள் ஆடைகளை நெய்கின்றன
இருந்தாலும், அவை பணக்காரர்களுக்காகவே.
கூச்சப்படுவதைப் போல் முகத்தை வைத்துக்கொண்டு
எதேச்சையாகச் சொல்வதுபோல்
மிஸஸ் என், பேராசிரியர் டி குறித்த
வதந்திகளைப் பரப்பிச் செல்கிறார்கள்.
… கேம்பிரிட்ஜ் பெண்களுக்கு,
இந்தக் கேம்பிரிட்ஜிக்கு மேலே
சில நேரங்களில் பெட்டிக்குள் இருப்பதைப் போன்ற
எல்லையற்ற லேவண்டர் நிற ஆகாயத்தைப் பற்றியோ
சினத்துடன் கிலுகிலுக்கும் மிட்டாய்த் துண்டு போன்ற
பிறை நிலவைப் பற்றியோ
எந்தக் கவலையுமேயில்லை.
இந்த வரிகள் என் மனத்தில் முதன்முறையாகச் சுழன்றபோது, ஒரு சத்தமில்லா அதிர்வாக அகத்தைக் கிளறியது. பெண்கள் எந்தக் காலத்தில் திண்ணையில் அமர்ந்து பேசத் தொடங்கினார்கள்? உள்ளத்தில் எதையும் சிந்திக்காமல் உணர்வுகள் நழுவி செல்லும் வழியில் விடாமல் பேசிக்கொண்டேயிருந்த சமூகம்தானே. தன்னைத் திரும்பிப் பார்த்துக்கொள்ளாத சமூகம் அது. தனக்கு நேர்ந்தால் அதில் குறையே இல்லை. பொறாமையோ, பொச்சரிப்போ என்பதுபோல் எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பது, தோன்றியதைச் சிந்திக்காமல் பேசுவது இவர்களுக்குக் கைவந்தது.
‘நாங்களெல்லாம் அந்தக் காலத்தில்’ என்று இழுத்துச்செல்லும் பேச்சு, நடப்பை விட்டுவிட்டு அந்தக் காலம் பொற்காலம் என்பது போல் பழம்பெருமையைப் பீற்றிக்கொள்கிறது. சமகாலம் பெரும்பூதம் போல் எதிரில் வந்தாலும் அலட்சியமே மேலோங்கிவிடுகிறது. அனுமானங்களில் எதார்த்தத்தைக் கவனிப்பதில்லை. இயற்கையின் அழகைத் தலைநிமிர்ந்து பார்ப்பதில்லை. தனக்கென ஒரு சிந்தனை மரபையோ, பாரம்பரியத்தையோ அறிவாந்த விசயங்களைத் திறந்த மனத்துடன் பார்க்கும் இடத்திலிருந்து விலகி நிற்கிறது. நாம் சுயமாகச் சிந்திக்கும் தன்மையிழந்து பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டோம். காலமும், சந்தர்ப்பமும் பழக்க வழக்கங்களுக்குள் தள்ளிவிட்டு, சுய சிந்தனையை வெளிப்படுத்தும்போது மேதமைத்தனமாகப் பார்க்கப்பட்டாலும் அதை எதிர்கொள்ள அறிவுசார் வீரமும் தேவையாகயிருக்கிறது. இந்த நேரத்தில் ‘நான் – என் உலகம்’ சார்ந்த அனுபவங்கள் உக்கிரமாகத் தெரிகின்றன.
கேம்பிரிட்ஜ் நகரில் வாழும் பெண்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்திருந்தாலும், அவர்கள் அழகாக இருக்கத் தேவையில்லை. அவர்களுடைய மனத்தில் கவலையில்லை. பிரச்சனைகள் பெரிதாக எதுவுமில்லை. அதனால் வாழ்க்கை சுவாரசியமின்றி, சவசவவெனச் செல்கிறது. எதைப் பார்த்தாலும் ஆசைப்படுவது, எல்லாமும் தெரிந்தது போல் காட்டிக்கொள்வதென, மரத்தடியில் அமர்ந்துகொண்டு கதை பேசுகிறார்கள். அவதூறுகளைப் பரப்புதலின் வழி, மற்றவர்களைப் பற்றி அவர்களுக்கு ஏகப்பட்ட புகார்கள் உண்டு. தனக்குப் பிரச்சனையில்லை என்றால் எதையும் யோசிக்காமல் புகார்களையும் வதந்திகளையும் சொல்லிக்கொண்டே திரிவார்கள். இயற்கையை நேசிப்பதற்கு ரசனை வேண்டும். கலையை நோக்குவதற்கு அகத்தில் அமைதியிருக்க வேண்டும். அதெல்லாம் எதுவும் இந்தப் பெண்களுக்கு இல்லையென அவர்களின் உலகத்தை இந்தக் கவிதையின் வழி நையாண்டி செய்கிறார்.
கம்மிங்ஸின் வரிகள் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுபவை. எனக்குப் பிடித்தது, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வாக்கிய ஒழுங்கினைக் கவனிக்கிறவர்கள் ஒரு போதும் முழுமையாக முத்தமிடத் தெரியாதவர்கள். இதைச் சொல்வதற்கு உண்மையில் துணிவு அதிகமிருக்க வேண்டும்.

உங்களை, மற்றவர்களைப் போல மாற்ற, இரவும் பகலும் தன்னால் முடிந்ததை இந்த உலகம் செய்துகொண்டிருக்கிறது. ஆனால் உங்களுக்காக உங்களைத் தவிர வேறு யாருமில்லை. இந்த உலகத்தில் மனிதராக இருப்பதே கடினமான போராட்டம். எந்தப் போராக இருந்தாலும் எதிர்த்துப் போராடுவதற்கான சக்தி எல்லோரிடமும் இருக்கிறது, ஒருபோதும் சண்டையிடுவதை நிறுத்த வேண்டாம் என்பது கம்மிங்ஸின் அறிவுரை எனக்கே சொன்னது போலிருக்கிறது.
தனது இறுதியாண்டுகளில் பல இடங்ளுக்குப் பயணம் செய்து சொற்பொழிவாற்றினார். அவரது மரணத்தின் போது அமெரிக்காவில் ராபர்ட் பிராஸ்ட்டுக்கு அடுத்து மிக அதிகமாக வாசிக்கப்பட்ட இரண்டாவது கவிஞராகக் கருதப்பட்ட E.E. கம்மிங்ஸ் தனது 67ஆம் வயதில் 1962 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் காலமானார். அவரது உடல் பாஸ்டன் நகரில் உள்ள ஃபாரஸ்ட் ஹில் பகுதி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது கையெழுத்துப் பிரதிகள், இன்று ஹார்வர்டு, டெக்ஸாஸ் பல்கலைக்கழகங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன.